தேர்தல் கடமைக்கு இடையூறாகவும் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவாகவும் போராட்டம்

27 0

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பொது மக்களாலும் பொது அமைப்புகளாலும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டு வருகின்ற நிலையில் புதன்கிழமை (6) காலை தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கு  கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அப்பகுதி விஜயம் மேற்கொண்ட குழுவினர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்கள் மேற்கொள்ள முடியாது என்பதால் இப்பகுதியில் இருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும் அவர்கள் அகன்று செல்லாததுடன் தேர்தல் உத்தியோகஸ்த்கர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரச சேவைக்கும் தேர்தல் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்டவர்களுக்கு வெளிநாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று நபருக்கு 3000 ரூபா வழங்கி போராட்டத்துக்கு அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.