காலி முகத்திடலில் சமூக நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு

12 0

இலங்கை துறைமுக அதிகார சபையின்  நிர்வாகக்  கம்பனியான  இலங்கை துறைமுக  முகாமைத்துவம் மற்றும் ஆலோசனைச் சேவைகள் தனியார் கம்பனியின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்ற காலி முகத்திடல் மைதானம் சமய வழிபாடுகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளுக்கு  பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கு 2023.04.17 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ரூபா தொடக்கம்  3 மில்லியன் ரூபா வரை செலவு செய்யப்படுவதுடன், குறித்த தொகையை ஈடு செய்வதற்காகவும்,  2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்றவாறு, உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக நடமாடக்கூடியதும், மிகவும் கவர்ச்சிகரமானதும், பாதுகாப்பானதுமான  இடமாக மக்களுக்குச் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கும் நோக்கில் வைபவங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வேறு கொண்டாட்டங்களுக்குப் பொருத்தமான நிர்ணயங்களுக்கமைய காலி முகத்திடல் மைதானத்தை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகளை வழங்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ‘தூய்மையானதும் பசுமையானதுமான காலி முகத்திடல்’ எனும்  எண்ணக்கருவுக்கு அமைய காலி முகத்திடல் மைதானத்தை நிர்வாக ரீதியாக மிகவும் முறைமை சார்ந்ததாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.