அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குச் சீட்டில் வங்காளம் உட்பட 4 மொழிகள்

21 0

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, நியூயார்க் நகரின் வாக்குச் சீட்டில் வங்காளம் உட்பட சீன, ஸ்பேனிஷ், கொரியன் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளன.

உலகின் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் நியூயார்க் நகரில் அதிகம் உள்ளனர். இங்கு 200-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். இங்கு அதிகம் பேசப்படும் மொழிகளில் 4 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த மொழிகளில் அதிபர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. வங்காளம், சீன, ஸ்பேனிஷ், கொரியன் மற்றும் ஆங்கில மொழிகளில் வாக்குச்சீட்டில் இடம் பெற்றுள்ளன. இந்திய மொழியான வங்காளம் சேர்க்கப்பட்டிருப்பது, இந்திய கலாச்சாரத்தை மட்டும் அல்லாத இங்கு இந்தியர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதையும் காட்டுகிறது.இந்த முன்னேற்றத்தை கொண்டாட வேண்டும் என டைம்ஸ் சதுக்கம் பகுதியில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றும் சுப்சேஷ் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், ‘‘வாக்குச் சீட்டில் வங்காள மொழி அச்சிடப்பட்டிருப்பது என் தந்தை போன்ற வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கும். நியூயார்க்கில் வசிக்கும் வங்காள மக்கள் வங்காள மொழியில்தான் பேசுகின்றனர். வாக்குச் சீட்டில் வங்காள மொழி இடம்பெற்றிருப்பதை எனது தந்தை பாராட்டுவார்’’ என்றார்.

அமெரிக்காவில் 1965-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஓட்டுரிமை சட்டத்தில், அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய சிறுபான்மையினருக்கு மொழி உதவி தேவை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் கடந்த 2013-ம் ஆண்டே நியூயார்க்கின் சில வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சீட்டில் தகவல்கள் வங்காள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. சட்ட கண்டோட்டம் மற்றும் தேவை அடிப்படையில், ஆலோசனைக்குப்பின் வங்காள மொழி தேர்வு செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ரியான் தெரிவித்தார்.