வழக்கு விசாரணைக்காக விஐபி-க்களுடன் வரும் வழக்கறிஞர் எண்ணிக்கை குறித்த மனு தள்ளுபடி

21 0

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் விஐபி-க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘திமுக பைல்ஸ்’ என்ற பெயரில் அந்தக் கட்சி தலைவர்களின் சொத்துப் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.. இதையடுத்து அவருக்கு எதிராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஏற்கெனவே ஆஜரானார்.

அப்போது அவருடன் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் ஆஜராகினர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் என்.மகேந்திரபாபு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் விஐபி-க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர், தமிழக அரசு மற்றும் டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஒரு வழக்கு விசாரணைக்கு குறி்ப்பிட்ட எண்ணிக்கையில்தான் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை’’ என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.