அமைச்சரவை நடைமுறை தெரியாமல் ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் முரண்படுவதில் பயனில்லை

18 0

அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கும் நடைமுறை தெரியாமல் இருக்கும் பிரதமர் ஹரிணி, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்படுவதில் எந்த பயனும் இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (05)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச ஊழியா்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் அரச நடைமுறைக்கு அமைய சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகும். அதன் பிரகாரமே அரச ஊழியா்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு உதய செனவிரத்ன குழு அமைக்கப்பட்டது.

அரச ஊழியர்களுக்கு நூற்றுக்கு 24வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த குழு பரிந்துரைத்திருந்தது. என்றாலும் அந்தளவு சம்பள அதிகரிப்பு செய்ய முடியாது என திறைசேரி தெரிவித்தபோது, உதய செனவிரத்ன குழு திறைசேரியுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்தது.

அதாவது அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை இரண்டு கட்டங்களில் அதிகரிக்க திறைசேரி இணக்கம் தெரிவித்திருந்தது. அதன் பிரகாரம் முதற் கட்டமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆயிரம் ரூபா அதிகரிப்பதற்கும் அடுத்த கட்டமாக 2025ஆம் ஆண்டு அதிகரிக்கவுமே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நடைமுறை பிரதமருக்கு தெரியாது. அது தெரியாமல் 40 வருட அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கிறார். அரசியல் அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும்.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி இன்னும் அரசாங்கம் செய்ய ஆரம்பிக்கவில்லை. அவர்கள் தற்போது எதிர்க்கட்சி அரசியலே செய்து வருகிறது. ஜனாதிபதி அநுரகுமாத திஸாநாயக்க தேர்தல் பிரசாரங்களில், முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் வரப்பிரசாரதங்களை குறைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி மாளிகைக்கு மரக்கறி வந்ததையுமே தெரிவித்து வருகிறார்.

இதனை தடுப்பதன் மூலம் நாட்டின் வருமானம் அதிகரிக்கப்படுவதுமில்லை. பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதும் இல்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூலம் மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடனே வாக்களித்தார்கள். மக்கள் எதிர்பார்த்த எந்த மாற்றமும் இதுவரை இடம்பெறவில்லை.

அதேபோன்று மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கி இருந்தது. குறிப்பாக எரிபொருள் விலை சூத்திரத்தை இல்லாதொழித்து, எரிபொருள் லீட்டர் ஒன்றின் மூலம் 160 ரூபா கொமிஸ் பணத்தை நிறுத்தி எரிபொருள் விலையை குறைப்பதாக தெரிவித்தார்கள்.

ஆனால் அவர்கள் தெரிவித்த பிரகாரம் எரிபொருள் விலை குறையவில்லை. அப்படியானால் அந்த 160 ரூபா தற்போது யாருக்கு செல்கிறது என கேட்கிறோம் என்றார்.