இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் 30 பேர் உயிரிழப்பு

18 0

இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்களும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அக்டோபர் 5ம் தேதி முதல் இஸ்ரேலிய ராணுவம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று இரவு முதல் நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய ஊடகங்களும் மருத்துவர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.

வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான WAFA மற்றும் ஹமாஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மத்திய கசாவில் உள்ள நகரமான அல்-சவேதாவில் திங்கட்கிழமை நள்ளிரவில் மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காசா நகரிலும், டெய்ர் அல்-பாலாவிலும் இரண்டு வெவ்வேறு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதனிடையே, காசாவின் பெய்ட் லாஹியா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் துண்டுப் பிரசுரங்களை வீசின. அதில், பெய்ட் லாஹியா பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தங்குமிடங்களை விட்டு வெளியேறாத பொதுமக்கள், உடனடியாக நகரத்தை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. “வீடுகளிலும் தங்குமிடங்களிலும் தங்கியிருபோர் அனைவரும், தங்கள் உயிரைப் பணயம் வைப்பதாகவே அர்த்தம். உங்கள் பாதுகாப்பிற்காக, நீங்கள் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும்” என்று அரபு மொழியில் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரம் கூறுகிறது.

காசாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த போரில் 43,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாக மாறிவிட்டன. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலைத் தாக்கி, சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பணயக்கைதிகளை காசாவிற்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து போர் தொடங்கியது நினைவுகூரத்தக்கது.