கடந்த 30 வருடங்களாக கொழும்பில் 27 க்கும் அதிகமானவர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதும் வடகொழும்பு இதுவரை எவ்வித அபிவிருத்தியும் இல்லாது காணப்படுகின்றது. தேர்தல் காலங்களிலேயே அரசியல்வாதிகள் மக்கள் இருப்பிடங்களுக்குச் சென்று பல பொய்வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் லயன் மனோ தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மைக் சின்னத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியில் 17 ஆம் இலக்கத்தில் கொழும்பு வடக்கில் போட்டியிடும் லயன் மனோ மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாநாகர சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் மட்டக்குளி தொகுதியில் வெற்றி பெற்று மாநாகர சபை அங்கத்தவராக நியமிக்கப்பட்டேன்.
அதன் பின்னர் இன்று வரை கொழும்பிலுள்ள அனைவருக்கும் மாநகர சபையின் மூலமாக அனைத்து சேவைகளையும் இரவு பகல் பாராது செய்துள்ளேன்.
அதேபோல் கொவிட் காலங்களில் மக்கள் அங்கலாய்த்துக்கொண்டிருந்த போது, அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுத்தேன். இலங்கையில் முதலாவதாக கொவிட் தடுப்பூசி ஏற்றும் திட்டம் கொழும்பு காக்கைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன்பின் வட கொழும்பு மாநகர சபையின் சுகாதார திணைக்களத்தின் ஊடாக பரிசோதகர்கள் மூலமாக மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதனால் கொழும்பில் ஆயிரக்கணக்கான மக்கள் எனது முயற்சியினால் பயன்பெற்றார்கள்.
இதேவேளை, கடந்த 30 வருடங்களாக கொழும்பில் 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதும் வடகொழும்பு இதுவரை எவ்வித அபிவிருத்தியும் இல்லாது காணப்படுகின்றது.
மழை காலங்களில் வெள்ளம் வழிந்தோட முடியாத நிலையில் வீதிகள் காணப்படுகின்றன. முறையான வடிகான் அமைப்புக்கள் இல்லை, நுளம்புத் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது. சேரிப்புறங்களில் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழுகின்றனர். போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துக் காணப்படுகின்றது, நாளுக்கு நாள் களவுகள் இடம்பெறுகின்றன.
கொழும்பு வர்த்தக தலைநகராக இருந்தாலும் இங்குவாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். குறிப்பாக வீட்டுப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை, பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. பல சுகாதரப் பிரச்சினைகள் காணப்படுகின்றன, தொழில்வாய்ப்பு பிரச்சினை உள்ளது.
இதுபோன்ற பல பிரச்சினைகளை நான் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் மூலம் நேரில் கண்டுள்ளதுடன் மக்களும் என்னிடம் பல கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். இம்முறை நான் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பட்சத்தில் கொழும்பில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கான வேலைத்திட்டங்களை உருவாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவேன்.
இதேவேளை, களனி கங்கையில் கொட்டப்படும் அனைத்துக் கழிவுகளும் கொழும்பு காக்கைதீவு பகுதியில் வந்து தேங்குவதால் அப்பகுதி மாதத்திற்கு ஒருமுறை துப்புரவுசெய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதற்கும் நான் ஒரு நிரந்திர திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளேன்.
குறிப்பாக தேர்தல் காலங்களிலேயே அரசியல்வாதிகள் மக்கள் இருப்பிடங்களுக்குச் சென்று பல பொய்வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் நான் அவ்வாறான ஒரு அரசியல்வாதி அல்ல. வருடத்தின் 365 நாட்களும் நான் மக்களின் இருப்பிடங்களை நோக்கி சென்று அவர்களின் நிலை அறிந்து சேவை செய்பவன் என்ற ரீதியில் தற்போது மக்களிடம் நான் பகிரங்கமாகவே வாக்கு கேட்கின்றேன்.
எனவே மக்கள் அனைவரும் மைக் சின்னத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியில் போட்டியிடும் எனக்கு ஆதரவு வழங்கி, இலக்கம் 17 க்கும் உங்கள் பெறுமதியான வாக்குளை வழங்கி பாராளுமன்றம் அனுப்பி என் மூலம் பல நன்மையடைவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். மக்களுக்கான எனது சேவை பாராளுமன்றம் ஊடாகவும் தொடரும் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.