உத்தியோகபூர்வ வாசஸ்தலம்: கையளிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

15 0

அரசாங்கத்திற்கு உரித்தான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை இதுவரை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் மிகவும் அச்சமற்ற துணிச்சலான தீர்மானத்தை எடுத்துள்ளனர். ஒரு ஊழல் கும்பல் இந்த நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்தது. நாட்டின் வளங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. திறைசேரியின் செல்வம் விரும்பியபடி பயன்படுத்தப்பட்டது. பொதுமக்களின் சொத்துக்களும் அவ்வாறே பயன்படுத்தப்பட்டன. அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 36 வருடங்களின் பின்னர் தனது வீட்டை கையளித்துள்ளார். அப்படியானால் பாருங்கள், அவர்களைப் பாருங்கள் இங்கேயும் கொழும்பிலும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். இப்போது அவர்களை அரச உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து வௌியேற்ற வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். அந்த ஆட்கள் தொடர்ந்து அரசாங்கத்தை நம்பியே இருக்கிறார்கள். பொதுச் சொத்தை தனிப்பட்ட சொத்தாகப் பயன்படுத்தியவர்கள். இந்த நாட்டை பெரும் கடன் வலையில் சிக்க வைத்தவர்கள். அந்த நபர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும் மட்டுமே சேவை செய்தனர். மக்களை வறுமையின் அடிமட்டத்தில் இறக்கியவர்கள்.”