கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையின் பிரதான சிறைக்காவலர் மற்றும் களஞ்சியசாலை காப்பாளர் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதியுடன் பிரதான சிறைக்காவலரும் காப்பாளரும் முறையற்ற தொடர்பைப் பேணி இரகசியமாக சிறைச்சாலைக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வந்து கைதிகளுக்கு வழங்கியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
பொலிஸ் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில், 04.11.2024 அன்று சிறைச்சாலை திணைக்களம் உதவி அத்தியட்சகர் ஒருவரின் உதவியுடன் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையின் பிரதான சிறைக்காவலர் மற்றும் களஞ்சிய காப்பாளர் ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எதிர்காலத்தில் சட்டத்தின் மூலம் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் எனவும் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட்ட பல அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.