எங்கு சென்றாலும் கலாச்சாரத்தை மறக்க கூடாது: மக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

19 0

 நம் நாட்டில் எங்கு சென்றாலும் நமது கலாச்சாரத்தை மறக்கக்கூடாது என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நிறுவன நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிறுவன தின விழா நேற்று, ஆளுநர்ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஹரியானா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், மத்தியபிரதேசம், அந்தமான் நிகோபர், லட்சத்தீவுகள் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் ஆளுநர்ஆர்.என்.ரவி பேசியதாவது:முன்பெல்லாம் மாநிலங்களின் நிறுவன தின விழாவானது, அந்தந்த மாநில அரசுகளால் கொண்டாடப்பட்டு வந்தது. அன்று அரசு ஊழியர்களுக்கு விடுமுறை, சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது என்று இருந்தது. இன்று, நாம் 9 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களின் நிறுவன தினத்தை கொண்டாடுகிறோம். தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், பல ஆண்டுகளாக வாழ்கின்றனர். மராட்டியர்கள் 500 ஆண்டுகளுக்கு முன் வந்துள்ளனர். 1,000 ஆண்டுகளுக்கு முன் சவுராஷ்டிரர்கள் இங்கு வந்துள்ளனர்.

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பது இந்தியா என்பதற்கான அரசியல் விளக்கமா என்றால் இல்லை. பண்டைய காலத்தில் மக்களுக்குள் தொடர்புகள் இல்லாவிட்டாலும், ஒற்றுமை இருந்தது. அதுதான் ஒரே பாரதம், உன்னதபாரதம். மாநிலங்கள் உருவானபின், அரசுகளும் வந்ததால், சமூகம் பிளவுபட்டுள்ளது. மாநிலம் என்பது சிறந்த நிர்வாகம் மற்றும் மக்களின் வளமான வாழ்வுக்காக உருவாக்கப்பட்டது. இந்தியா என்பது அமெரிக்கா போன்று கூட்டமைப்பு இல்லை. பாரதத்தின் உடல் பாகங்களாக சிறந்த நிர்வாகங்களுக்காக மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய விடுதலையின்போது 15 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 28 மாநிலங்கள் உள்ளன.

மாநிலங்கள் சிறந்த நிர்வாகங்களுக்காக உருவாக்கப்பட்டாலும், துரதிருஷ்டவசமாக அரசியல் அதிகாரத்துக்கு வந்தபோது மக்களை மொழி வாரியாகவும், மதவாரியாகவும் பிரிக்கத் தொடங்கியது. அதிகார அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியல் ஆகியவை வந்தபின், பெரிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல், சிறிய சிறிய விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். பண்டைய பாரதத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியின்போதும் பெரும்பான்மை, சிறுபான்மை என்பது இல்லை. பொதுமக்கள் இணைந்து வாழ கற்று வைத்திருந்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, வங்கப் பிரிவினைக்கு தமிழகத்தில்தான் எதிர்ப்பு கிளம்பியது. நாம்எங்கு வாழ்ந்தாலும் பாரதியர்கள்தான். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். தற்போது பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதியை குறிக்கும் கயிறு கட்டும் பழக்கம் உள்ளது. இன்றளவும் ஆதிதிராவிடர்கள் கோயிலுக்குள் அனுமதிக்காத நிலை செய்தியாக வருகிறது. இந்த பிரிவினைகளை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.

இந்தியாவை மொழி, இனவாரியாக பிரிக்க பல முறை முயற்சிகள் நடைபெற்ற போதிலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்தியா வெவ்வேறான கலாச்சாரங்களை கொண்ட நாடாக உள்ளது. நாம் கொண்டாடும் பண்டிகைகளிலும் ஒற்றுமை உள்ளது.மாநில அளவில், பெயர் உள்ளிட்டவற்றில் சில வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே காரணத்துக்காக கொண்டாடப்படும். நாட்டின் ஒருபகுதியில் இருந்து வேறு பகுதிக்குநாம் சென்றாலும், நமது கலாச்சாரத்தை மறக்கக் கூடாது. நாம் வாழும் உள்ளூர் கலாச்சாரத்தை கொண்டாடுவதுடன், நமது கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும். இது நமது கடமையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.