பாராளுமன்றத்துக்குள் குண்டு வீசியவர்கள் பாராளுமன்றத்தை விரமசிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை – நிஷான்த ஸ்ரீ வர்ணசிங்க

20 0

 பாராளுமன்றத்தில் இரத்தக்களறியை ஏற்படுத்திய வலாற்றைக்கொண்டவர்கள் பாராளுமன்றத்தை விமர்சிப்பதுக்கு எந்த தகுதியும் இல்லை. ஜனாதிபதியின் நடவடிக்கை பாராளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்து வரும் நம்பிக்கையை இல்லாமலாக்கச் செய்யும் என புதிய ஜனநாயக முன்னிணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில்   இடம்பெற்ற செய்தியாளர் சந்த்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்து வருவகை காண்கிறோம். இதன் மூலம் பாராளுமன்றத்துக்கு புதிதாக செல்ல இருப்பவர்களுக்கும் பாராளுமன்றம் தொடர்பில் பிழையான எண்ணமே தோன்றும்.

அதேபோன்று அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த நடவடிக்கை பாராளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்து வரும் நம்பிக்கையை இல்லாமல் செய்கிறது. நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த செயலை நாங்கள் கண்டிக்கிறோம்.

பாராளுமன்றத்தை திருடர்களின் குகை என  விமர்சிக்கும் அநுரகுமாரவின் மக்கள் விடுதலை முன்னணியே 1987ஆம் ஆண்டும் பாராளுமன்றத்துக்குள் குண்டு தாக்குதல் மேற்கொண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவை கொலை செய்ய முற்பட்டது.

இவ்வாறு  இரத்தக்கறை படிந்த வரலாற்றைக்கொண்டவர்கள் தற்போது பாராளுமன்றத்தை திருடர்களின் குகை என தெரிவிக்கின்றனர்.

மக்களின் பணத்தையும் நாட்டின் சொத்துக்களையும் கொள்ளையடித்தே அவர்களின் கட்சிக் காரியாலயத்தை கட்டியெழுப்பியுள்ளார்கள். கைகளில் கறை படிந்தவர்கள் தற்போது சுத்தமானவர்கள் போன்று கதைத்து வருகின்றனர்.

நாட்டின் முன்னைய தலைவர்கள் எப்போதும் பாராளுமன்றத்தின் சம்பிரதாயம் மற்றும் கெளரவத்தை பாதுகாக்கவே நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

பாராளுமன்றத்தின் கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அவர்கள் இடமளிக்கவில்லை. ஆனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியே பாராளுமன்றத்தை தாக்குவதற்கு வந்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க அதற்கு இடமளிக்காமல் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் பாராளுமன்றத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்.

திருடர்கள் மற்றும் மோசடி காரர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்பாமல் பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தும் பொறுப்பு மக்களிடமே இருக்கிறது.

மக்களின் பொறுப்பை அநுரகுமார திஸாநாயக்க எடுக்கக்கூடாது. அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை மறந்து, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் போன்றே தேர்தல் மேடைகளில் பேசி வருகிறார்.

எனவே நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் பாராளுமன்றத்தின் கெளரவத்தை பாதுகாக்கும் வகையில்  அநுரகுமார திஸாநாயக்க செயற்பட வேண்டும் என்றார்.