தமிழரசுக்கட்சியை மௌனிக்கச் செய்யவேண்டும் என்ற நோக்குடன் அரசு செயற்படுகின்றது – ரவிகரன்

15 0

தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் நிலங்களையும் காத்து நின்ற தமிழீழ விடுதலைப்புலிகளை மௌனிக்கச்செய்தது போல், தற்போது தமிழ் மக்களின் உரிமைக்காக ஜனநாயகவழியில் போராடும் தமிழரசுக்கட்சியையும், வீட்டுச்சின்னத்தையும் மௌனிக்கச்செய்யும்நோக்குடன் இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு காணி, பொலிஸ் அதிகாரம் தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமை எனவும்,  யுத்தக்குற்றவாளிகளுக்கான விசாரணைகளும், அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் தேவைஎனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியலமைப்பின் பதின்மூன்றாம் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

யுத்தம் மௌனிக்கப்பட்டதற்குப்பின்னர் பல வெளிநாடுகளின் அழுத்தங்களால் அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்தினை தமிழ் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அவ்வாறு ஏற்றுக்கொண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் இந்த நாட்டில் தற்போது அமுலிலுள்ள மாகாணசபை முறைமையால் தமிழர்களுக்குரிய தீர்வை வழங்கமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

பெரும்பான்மையினத் தலைவர்கள் எவரும் தமிழர்களுக்கான தீர்வினை தாமாக முன்வந்துதந்துவிடப்போவதில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படத்தான் வேண்டுமென சர்வதச நாடுங்கள் இலங்கைக்கு ஒருமித்து அழுத்தங்களை வழங்கினால் நிச்சயமாக தமிழர்களுக்குரிய தீர்வு கிடைக்கும்.

இந்தியா நினைத்திருந்தால் எப்போதோ தமிழர்களுக்குரிய தீர்வினைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியில் இலங்கை அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தம், அதன்மூலம் இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு நோக்கோடு மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு இந்தியாவின் தலையீட்டுடன் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அற்பசொற்ப அதிகாரங்களைக்கூட தற்போது மத்திய அரசால் மீளப்பெறப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

தற்போது இந்த நாட்டைப் பொறுப்பேற்றுள்ள ஜே.வி.பி அரசாங்கம் பதின்மூன்றாம் அரசியலமைப்பில் பொலிஸ்அதிகாரம் மற்றும், காணி அதிகாரங்களை வழங்கமுடியாது எனக் கூறுகின்றனர்.

அத்தோடு யுத்தக்குற்றம் புரிந்தவர்களுக்கான விசாரணைகள் இல்லை என்றும் கூறுகின்றனர்.

இவை மூன்றுமில்லாத தமிழர்களுக்கான தீர்வு எது. இந்த மூன்று விடயங்களுமில்லாத தமிழர்களுக்கான தீர்வு எதற்கு.

குறிப்பாக வடக்குக் கிழக்கை தமிழர்களின் தாயகம் என்றுகூறுகின்றோம். ஆகவே நில உரிமை என்பது மிக முக்கியமானதாகும். எமது நிலம் எமது உரிமையாகும்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஒதியமலை, பட்டிக்குடியிருப்பு இவ்வாறான எல்லைக் கிராமங்களை பெரும்பான்மையினத்தவர்கள் அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புக்களுடன் அபகரிக்கின்ற நிலை காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு ஏறக்குறைய ஐந்து இலட்சத்து தொண்ணுற்ராறாயிரம்.

இதில் இரண்டு இலட்சத்து இருபத்திரெண்டாயிரத்து ஆறு ஏக்கர் நிலம் 2009ஆம்ஆண்டிற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடமிருந்தது. தற்போது நான்கு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் ஏக்கர் நிலம் வனவளத்திணைக்களத்திடம் இருக்கின்றது.

இவ்வாறு எமது தமிழ் மக்களுடைய நிலங்கள் தற்போது எவ்வாறு ஆக்கிரமிக்கப்படுகின்றது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். இது வனவளத் திணைக்களதின் அபகரிப்பு மாத்திரமாகும்.

இதேபோல வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், படையினர்

படையினர் எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு படையினர் என்ற வீதத்தில் இருக்கின்றார்கள்.

67ஆயிரம் படையினர் இங்கு இருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆகவே எமக்கு நிலமில்லை எனில் எமக்கு எதுவுமே இல்லை.

இவ்வாறான ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவே நாம் மக்களோடு இணைந்து தொடர்ந்து போராடிவருகின்றோம்.

இவ்வாறு நாம் மேற்கொண்ட எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் நாம் எமது நிலத்தை ஓரளவேனும் தக்கவைக்கமுடிந்துள்ளது.

ஒரு காலத்தில் எமது நிலத்தைக் காத்தவர்கள் இன்று எம்மிடமில்லை. அவர்கள் மௌனிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு எமது நிலத்தைக் காத்தவர்கள் மௌனிக்கப்பட்ட பிற்பாடு எமது நிலங்கள் மிக வேகமாக அபகரிக்கப்படுகின்றது.

இவ்வாறு எமது நிலங்களையும், எமது மக்களையும் காத்துநின்ற விடுதலைப்புலிகளை மௌனிக்கச் செய்தததைப்போல தமிழரசுக்கட்சியையும் வீட்டையும் உடைத்துவிட்டால் தாம் நினைப்பதைப்போல எதையும் செய்துவிடலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணுகின்றது.

ஆனால் எமது தமிழ் மக்கள் இன்னும் வீட்டுச் சின்னத்தை மறக்கவில்லை. மக்களிடம் நாம் சென்று நேரடியாகப் பேசும்போது வீட்டுச்சின்னம் என்ற நிலையில் மாறாதிருப்பது எமக்கு மகிழ்வைத் தருகின்றது.

வீட்டுச்சின்னம்தான் தமிழர்களின் சின்னமாகும். ஆகவே வீட்டுச்சின்னத்திற்கு தமிழர்கள் அனைவரும் ஒருமித்து வாக்களித்தால் வன்னித் தேர்தல் தொகுதியில் வீட்டுச்சின்னத்தில் ஐந்து ஆசனங்களைப் பெறமுடியும், என்றார்.