இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல்: ஈரான் மதத் தலைவர் எச்சரிக்கை

44 0

இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் யுஎஸ் பி-52 ரக போர் விமானங்கள் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த 26-ம் தேதி இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானின் ராணுவ தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மீது குண்டுகளை வீசின.

இந்த சூழலில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “ஈரான் மற்றும் எதிர்ப்பு படைகள் (ஹமாஸ், ஹிஸ்புல்லா) மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஈரான் ராணுவத்துக்கு மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஈரான் ராணுவத்தின் ஐஆர்ஜிசி படைப்பிரிவின் தலைவர் ஹூசைன் சலாமி கூறியிருப்பதாவது: சர்வதேச அராஜகத்துக்கு எதிராக ஈரான் போராடி வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இறுதி காலத்தை நெருங்கிவிட்டன. வாஷிங்டன் (அமெரிக்கா), டெல் அவிவ் (இஸ்ரேல்) தலைமைக்கு தகுந்த நேரத்தில் தகுந்த பாடம் கற்பிக்கப்படும்.

காசா, லெபனானில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. இதை அமெரிக்க அரசு கண்டு கொள்வது கிடையாது. ஆனால் சர்வதேச அளவில் ஜனநாயகம் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் அந்த நாடு குரல் எழுப்புகிறது. இது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு ஐஆர்ஜிசி படைப்பிரிவின் தலைவர் ஹூசைன் சலாமி தெரிவித்தார்.

ஈரானின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் யுஎஸ் பி-52 ரக போர் விமானங்கள் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. இந்த வகை போர் விமானங்கள், அணு குண்டுகளை வீசும் திறன் கொண்டவை ஆகும்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 26-ம் தேதி ஈரான் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அன்றைய தினம் ஈரானின் அணு சக்தி தளங்கள், எண்ணெய் கிணறுகள் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு இருந்தது. எனினும் அமெரிக்காவின் அறிவுரைப்படி அன்றைய தினம் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

தற்போது இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தும். இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அரணாக நாங்கள் இருப்போம். மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரிக்க செய்ய வேண்டாம் என்று பலமுறை ஈரானை அறிவுறுத்தி உள்ளோம். ஆனால் அந்த நாடு அத்துமீறி செயல்பட்டால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அமெரிக்க வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.