குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்

16 0

 சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. குரங்கம்மை பாதிப்புள்ள 116 நாடுகளில் இருந்து வந்தவர்கள், அந்நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் குரங்கம்மை தொற்றுநோய் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் குரங்கம்மை தொற்றுநோய் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறியுடன் வருவோரை தனிமைப்படுத்தி பொதுசுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடி தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மாநகரங்களிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் குரங்கம்மை நோய் தீவிர கண்காணிப்பு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலா ஒரு 108 அவசர ஊர்தி தற்காப்பு, கவச உடை அணிந்த பணியாளர்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு தனிமைப்படுத்துதல் வார்டு அமைக்கப்பட்டுள்ளன. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு பரிசோதனை நிலையத்தில் குரங்கம்மை கண்டறியும் வசதி உள்ளது.

கடந்த மாதம் 31-ம் தேதி சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஒரு பயணிக்கு குரங்கம்மை தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. அவர் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சென்னை கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் புனே தேசிய வைரஸ் ஆய்வக நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவில் அந்த நபருக்கு குரங்கம்மை தொற்று இல்லை என்பதும், அவருக்கு சின்னம்மை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. புனே ஆய்வகத்தில் இருந்து வந்த முடிவிலும் குரங்கம்மைத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. குரங்கம்மை குறித்த சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கடந்த 21 நாட்களில் குரங்கம்மை தொற்று பரவி உள்ள 116 நாட்டுக்கு பயணம் மேற்கொண்டவர்கள், தங்களுக்கு குரங்கம்மை அறிகுறிகள் (காய்ச்சல், தோல் கொப்புளங்கள், கழுத்தில் நெறி கட்டி) காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களை அணுக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.