பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில்,
லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவுக்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.