தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை தொடர்பிலும் ஒன்றுபடுவது தொடர்பிலும் கடந்த காலங்களிலும் நாங்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றோம். அந்த வகையில் நாங்கள் பல தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்துதான் தற்போது சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இந்த பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) கட்சியின் உபதலைவர் பொன்.செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் த.வசந்தராஜாவை ஆதரித்து மண்டூர் பகுதியில் சனிக்கிழமை (02) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
இன்னும் ஒரு சில கட்சிகள் எம்முடன் இணையாமல் இருக்கின்றனர். அவர்களும் எதிர்காலத்தில் எம்முடன் இணைந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
அந்த வகையில், அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். எமது மக்களின் ஒரே கொள்கையோடு, ஒரே தேசியத்தோடு, தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்கொண்டு செல்வதற்கு அனைவரும் கரம் கோர்க்க வேண்டும்.
எமது மக்களை இனிமேலும் நாங்கள் பிரித்து வாழுகின்ற தன்மைகள் இருக்கக்கூடாது. தேசிய கட்சிகளோடு சேர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற இளைஞர்கள், யுவதிகள் இதனை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
எதிர்வரும் காலங்களிலே அவர்கள் தேசிய கட்சிகளோடு சேர்கின்ற விடயங்களை விட்டுவிட்டு அவர்கள் நிச்சயமாக தமிழ் தேசியத்தோடு ஒத்துழைப்பார்கள் என நான் நம்புகின்றேன்.
தற்போது எமது தேர்தல் பரப்புரைகள், பிரசார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. மக்கள் எம்மை அமோகமாக வரவேற்கின்றார்கள்.
தமிழ் தேசியத்தின்பால் எமது சங்கு சின்னத்தை பலப்படுத்துவதற்கு மக்கள் திடசங்கற்பம் கொண்டுள்ளார்கள். அதற்காக வேண்டி எதிர்வரும் 14ஆம் திகதி எமக்கு வாக்களிக்க இருக்கின்றார்கள்.
எனவே, அனைத்து மக்களும் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து எமது வேட்பாளர் சமூக சேவையாளர் வசந்தராஜா அவர்களது இலக்கமான இரண்டாம் இலக்கத்துக்கும் வாக்களிக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.