திகாவும் நானும் பாராளுமன்றத்தில் சகபாடிகள்; பின்தங்கிய சமூகத்தின் நன்மைக்காக பாடுபட்டவர்கள்

12 0

தம்பி திகாவும் நானும் பாராளுமன்றத்தில் சகபாடிகளாக இருந்து பல்வேறு விடயங்களில் கலந்து பேசி பின்தங்கியிருந்த சமூகத்தின் நன்மைக்காக பாடுபட்டுள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று (02) ஹட்டனில் நடைபெற்ற “மலையகம் 200 – திகாம்பரம் 20” நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

சாதாரண தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அரசியலில் இறங்கி, கெபினட் அமைச்சராகி சேவை செய்து மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரத்தின் வளர்ச்சியும் உயர்ச்சியும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

தான் பிறந்த மண்ணுக்கு தேவையான அபிவிருத்தியையும், மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு அரசியலில் கால் பதித்த திகாம்பரம் அதை நடைமுறைப்படுத்திக் காட்டினார்.

இனவாதம், மதவாதம், பிரதேச வாதம், பொய், புரட்டு, பித்தலாட்ட வாதங்களுக்கு அப்பால் நேர்மையான அரசியலை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளார்.

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு தமிழ் முற்போக்கு ஆரம்பிக்கப்பட்டபோது அதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.

தம்பி திகாவும் நானும் பாராளுமன்றத்தில் சகபாடிகளாக இருந்து பல்வேறு விடயங்களில் கலந்து பேசி பின்தங்கியிருந்த சமூகத்தின் நன்மைக்காக பாடுபட்டுள்ளோம்.

அவர்  நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள், செயலகங்கள் அதிகரிப்புக்கும் அதிகார சபை உருவாகுவதற்கும் காரணமாக இருந்ததை மலையக வரலாறு நினைவுகூரும்.

அதேபோல், காணி உறுதிப்பத்திரங்களுடன் தனி வீட்டுத் திட்டத்தை ஏற்படுத்தி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர திட்டமிட்டு செயலாற்றி வந்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடி மலையகம் எழுச்சி பெற அவரது சேவையைத் தொடர வேண்டும் என்றார்.