மேட்டுக்குடி அரசியலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திகாம்பரம் – ரவூப் ஹக்கீம்

15 0

தமிழ் முற்போக்கு கூட்டணி மும்மூர்த்திகளில் ஒருவரான திகாம்பரம் மேட்டுக்குடி அரசியலுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியதோடு கிடைத்ததை சரியாக பயன்படுத்திக் குறுகிய காலத்தில் மலையக மக்களுக்குச் சிறப்பான சேவையாற்றியுள்ளார் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று சனிக்கிழமை (02) நடைபெற்ற திகாம்பரத்தின்  “மலையக 200  –  திகாம்பரம்  20” பாராளுமன்ற உரைகள் நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

நண்பர்கள் மனோ, திகா, இராதா ஆகியோர் சமூக சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதில் திறமை வாய்ந்தவர்கள் என்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன்.

திகாவுக்கு கோபம் வரும் என்றாலும் அவரது கோபத்தில் நியாயமும் நேர்மையும் இருக்கும். அத்தோடு குறுகிய காலத்தில் அவரது அரசியல் வளர்ச்சியின் ஊடாக மலையக சமூகம் பயன்பெற்றுள்ளது.

அதில் திகாவின் வகிபாகம் வரலாற்றில் மறக்க முடியாததாகும். அவர் சாதாரண மக்களின் இதயத் துடிப்பாக இருக்கின்றார்.

ஆட்சியில் இருப்போரின் அலட்சியப் போக்கு ஒருபுறம்: தோட்ட முதல்லைமாரின் கெடுபிடிகள் ஒருபுறம்:  பிரித்தாளும் தந்திரங்கள் ஒருபுறம் இருந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மூவரின் ஒற்றுமையும், நம்பிக்கையும் வளர்ச்சிக்கு வழிகோலியுள்ளது.

சாதாரண மக்களுக்கு சேவை செய்வதாகப்  படம் போட்டுக் காட்டும் அரசியல்வாதிகள் மத்தியில் திகாம்பரம் ஒரு சாதனையாளராக விளங்குகிறார். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் தமக்குக் கிடைத்த மக்கள் ஆணையைப் பயன்படுத்தி சமூகத்துக்கு முழுமையான பங்களிப்பை செய்து வந்துள்ளார்கள்.

அரசியலில் திகாம்பரம் இருபது ஆண்டுகள் சாதித்திருந்தாலும் அவர் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கின்றது. அதற்கு சவால்களை எதிர்கொண்டு முறியடிக்கக் கூடிய உறுதியான மனம் வேண்டும். மலையக மக்களின் மேலான வாழ்வுக்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு என்றும் கிடைக்கும் என்றார்.