அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸும் டொனால்ட் ட்ரம்பும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.
தங்கள் புதிய ஜனாதிபதி யார் என்பதை அறிவதற்காக, முடிவு செய்வதற்காக, அமெரிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
ஆனால், தேர்தல் முடிவுகளுக்காக காத்திருப்பது அவர்கள் மட்டுமல்ல, உலக நாடுகள் பல, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன.
அதற்குக் காரணம், அமெரிக்காவில் எடுக்கப்படும் எந்த முடிவும் உலக நாடுகள் பலவற்றில் எதிரொலிக்கும் என்பதுதான்!
காத்திருக்கும் ஜேர்மனி
அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் நாடுகளில் முக்கியமான நாடு ஜேர்மனி.
காரணம், தேர்தலில் வெல்லப்போவது கமலாவா அல்லது ட்ரம்பா என்பது ஜேர்மனி மீது குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
முதலாவதாக, ரஷ்ய உக்ரைன் போரில், ஜேர்மனி உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கிறது. அமெரிக்காவும் அப்படித்தான். கமலா ஜனாதிபதியானால் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது.
ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியாவாரானால், அவர் போரை உடனடியாக முடிக்கத்தான் விரும்புவார். அப்படியானால், உக்ரைன், தனது நாட்டில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பல பகுதிகளை விட்டுக்கொடுக்க கட்டாயப்படுத்தப்படும்.
அடுத்ததாக, கமலா நேட்டோ அமைப்புக்கு ஆதரவானவர். ட்ரம்போ நேட்டோ என்னும் ஒரு அமைப்பே எதற்கு என கேள்வி எழுப்பியவர்.
தனது ஆட்சிக்காலத்தில், ஜேர்மனியிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ளப்போவதாக அவர் ஏற்கனவே மிரட்டியுள்ளதால், அவர் ஜனாதிபதியாகும்போது அதற்கும் பிரச்சினை ஏற்படலாம்.
மூன்றாவதாக, ஜேர்மனி, அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளர் நாடுகளில் ஒன்றாகும். ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியாவாரானால், அவர் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 60 சதவிகிதமும், ஜேர்மனி மீதான மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 20 சதவிகிதமும் வரி விதிப்பார்.
அதனால், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஜேர்மன் தயாரிப்புகளின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.
குறிப்பாக, தானியங்கி துறையும், மருந்தகத் துறையும் கடுமையாக அடிவாங்கும்.
நான்காவதாக, கமலா ஹரிஸ் பருவநிலை மாற்றத்தை மனித இனத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகப் பார்க்கிறார். ஆகவே, அது தொடர்பான சட்டம் மற்றும் திட்டங்களுக்கு தற்போதைய அமெரிக்க அரசு ஆதரவாக செயல்பட்டுவருகிறது.
ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியாவாரானால், அமெரிக்கா பருவநிலை மாற்ற நடவடிக்கைகளிலிருந்து முற்றிலுமாக திரும்பிவிடுவதுடன், சர்வதேச பருவநிலை ஒப்பந்தங்களிலிருந்தும் வெளியேறிவிடும்.
அது, பருவநிலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் சர்வதேச விதிகளைக் கொண்டுவர பாடுபட்டுக்கொண்டிருக்கும் ஜேர்மனிக்கு கடினமான விடயமாகிவிடும்.
அக்டோபர் மாதத்தின் நடுவில், அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் ஜேர்மனிக்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு மாபெரும் கௌரவமும் வரவேற்பும் அளிக்கப்பட்டது.
ஆனால், அடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜேர்மனிக்கு வரும்போது, அவருக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது, தேர்தலில் யார் வெற்றிபெறப்போகிறார் என்பதைப் பொறுத்துதான் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.