ரஷ்யாவுக்கு மின்னணு சாதனங்களை விற்பனை செய்ததாக 19 இந்திய நிறுவனங்கள் மீது தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு

21 0

 ரஷ்யாவுக்கு மின்னணு சாதனங்களை விற்பனை செய்ததாக 19 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.இந்த சூழலில் ரஷ்யாவுக்கு தேவையான மின்னணு சாதனங்கள், ஆயுத உதிரிபாகங்கள், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவை வடகொரியா, சீனா, இந்தியா, துருக்கி, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கஜகஸ்தான் நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து மறைமுகமாக கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அமெரிக்க அரசு கண்டுபிடித்து சுமார் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 19 நிறுவனங்கள், தனிநபர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய ராணுவம் மற்றும் அந்த நாட்டின் தொழில் துறைக்கு தேவையான மின்னணு சாதனங்கள், தொழில்நுட்பங்கள் மூன்றாம் தரப்பு நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இந்தியாவை சேர்ந்த அசென்ட் அவிடேசன் அண்டியா, மஸ்க் ட்ரான்ஸ், டிஎஸ்எம்டி குளோபல், புயூடிரிவோ ஆகிய நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களுக்கு பொருட்களை அனுப்பி உள்ளன.

இந்தியாவின் அசென்ட் அவிடேசன் நிறுவனம் ,ரஷ்ய நிறுவனங்களுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான விமான உதிரிபாகங்களை அனுப்பி உள்ளது. இவை அமெரிக்க தயாரிப்பு உதிரி பாகங்கள் ஆகும். இதேபோல இந்தியாவை சேர்ந்த மஸ்க் ட்ரான்ஸ் நிறுவனம் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிஎச்பிஎல் பொருட்களை ரஷ்ய நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறது.

இந்தியாவின் டிஎஸ்எம்டி குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 4,30,000 அமெரிக்க டாலர் மதிப்பான சிஎச்பிஎல் பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளது. இந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. இனிமேல் இந்த நிறுவனங்களால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து பொருட்களை வாங்க முடியாது. இவ்வாறு அமெரிக்க அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியதாவது: இந்திய நிறுவனங்கள் உட்பட சுமார் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் சர்வதேச அளவில் வணிகம் நடத்தி வருகின்றன. அமெரிக்க அரசின் தடையால் நிறுவனங்களுக்கோ, ரஷ்யாவுக்கோ மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட போவதில்லை.

வரும் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டே ஆளும் ஜனநாயக கட்சியின் அரசு 400 நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்திருப்பதாக அறிவித்து உள்ளது. இது அரசியல்ரீதியான நடவடிக்கை ஆகும். இவ்வாறு சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.