‘பிரேக்கிங் பேட்’ பாணியில் மெகா போதைப் பொருள் ஆய்வகம்: கனடாவில் இந்திய வம்சாவளி நபர் கைது

17 0

கனடாவில் ‘பிரேக்கிங் பேட்’ வெப் தொடர் பாணியில் மிகப்பெரிய போதைப் பொருள் ஆய்வகத்தை நடத்தி வந்த இந்திய வம்சாவளி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க வெப் தொடர் பிரேக்கிங் பேட். இதில் பிரதான கதாபாத்திரங்கள் இரண்டு பேர் ‘மெத்’ வகை போதைப் பொருளை தயாரிக்க சொந்தமாக ஆய்வகம் நடத்தி வருவர். கனடா நாட்டில் இதே பாணியில் இயங்கி வந்த மிகப்பெரிய போதைப் பொருள் ஆய்வகத்தில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வகத்தை நடத்தி வந்த இந்திய வம்சாவளியினரான ககன்ப்ரீத் ரன்ந்தாவா என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த ஆய்வகத்தில் அதிநவீன கருவிகள் மூலம் மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

இந்த சோதனையில் 54 கிலோ ஃபென்டானில், 390 கிலோ மெத்தம்பெட்டமைன், 35 கிலோ கொக்கைன், 15 கிலோ எம்டிஎம்ஏ உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஃபென்டானில் போதைப் பொருளின் மதிப்பு மட்டுமே சுமார் 485 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் தவிர்த்து அங்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை கனடாவில் நடைபெறும் போதைப் பொருள் கடத்தலுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று போலீஸார் கூறுகின்றனர். மேலும் இதன் பின்னால் இருப்பவர்கள் யார், அங்கிருந்து எந்த எந்த நாடுகளுக்கு போதைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது.