ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் அவசியம்

28 0

 தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மீறல்களுக்கு எதிராகத் தாம் குரலெழுப்பவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர், ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் ஊடாக புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே பியெர் பொலிவ்ர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

‘தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக நாம் குரல்கொடுக்கவேண்டும். நாம் ராஜபக்ஷாக்களை சர்வதேச அரங்கில் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொன்சவேட்டிவ் கட்சியின் ப்ரியன் மல்ரொனியே முதன்முறையாக தமிழர்களுக்கு கனடாவுக்குள் இடமளித்ததாகவும், தமது கட்சியைச் சேர்ந்த ஜோன் பெய்ர்ட் மற்றும் ஸ்டீவன் ஹார்பர் ஆகியோர் கடந்தகால அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள பியெர் பொலிவ்ர், எனவே இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் கொன்சவேட்டிவ் கட்சி நீண்டகாலமாக நேர்மறையான விதத்தில் செயற்பட்டுவந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி தமிழினப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.