வர்த்தக , முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து இலங்கை – கனேடிய வணிகப்பேரவை உறுப்பினர்கள் ஆராய்வு

14 0

 இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) இலங்கை – கனேடிய வணிகப்பேரவை உறுப்பினர்கள் கனடாவுக்கு 9 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்தல், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் விரிவுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அந்நாட்டுப் பிரதிநிதிகளுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை – கனடாவுக்கு இடையிலான வர்த்தகத்தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்காகக்கொண்ட இலங்கை – கனேடிய வணிகப்பேரவையின் 9 உறுப்பினர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 14 – 22 ஆம் திகதி வரை கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை – கனேடிய வணிகப்பேரவையின் தலைவர் பிரியந்த சந்திரசேகரவினால் வழிநடத்தப்பட்ட இக்குழுவினர் கனடாவின் வணிகத்துறை தலைவர்கள், அரசாங்கப்பிரதிநிதிகள், கல்வியியல் நிலையங்களின் அதிகாரிகள், வர்த்தகக் கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

இலங்கை – கனேடிய வணிக மாநாடு, ஸ்கார்பரோ வணிக அமைப்பில் அங்கம்வகிக்கும் உறுப்பினர்களின் பங்கேற்புடனான கூட்டம், ஒன்ராரியோ பல்கலைக்கழகங்கள் பேரவையின் தலைவர் ஸ்டீவ் ஒர்ஸினியுடனான சந்திப்பு, ‘கன் லங்கா வணிக அமைப்பு’ பிரதிநிதிகளுடனான சந்திப்பு, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு என்பன இதில் உள்ளடங்குகின்றன.