வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை எமது கட்சி 10 பேரை நாடாளுமன்றம் அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும்

21 0

ஜனாதிபதி நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றப் போவதான அறிவிப்பு சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கும் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்கக்கூடிய தேர்தலாக இருக்கின்றது என மக்களை எச்சரிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

எனவே, இந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை எமது கட்சி 10 பேரை நாடாளுமன்றம் அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு அரசடி தெய்வநாயகம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (31) மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

இந்த தேர்தல்  விசேடமாக தமிழ் மக்களுடைய தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு தேர்தலாக சமகால அரசியல் ஆக்கிவிட்டது என்ற கருத்து மேலோங்கியுள்ளது.  ஆனால், ஒரு தேர்தல் எம்முடைய தலைவிதியை முற்றுமுழுதாக மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெறுவது என்பது மிகவும் குறைவு. அப்படிப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

இன்று ஜனாதிபதியாக இருக்கும் ஜே.வி.பி கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு புதிய அரசியல்  அமைப்பு ஒன்றை நிறுவுவதன் ஊடாகவும் 2015 மைத்திரி – ரணில் நல்லாட்சி காலத்திலே புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முன்னெடுக்கப்பட்டு 2017 செட்டெம்பர் 19 ஒரு இடைக்கால அறிகையை வெளியிட்டது.

அந்த அறிக்கையை தேர்தலுக்கு பின்னர் அதனை நிறைவேற்றி தீர்வு வழங்கப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, அந்த இடைக்கால அறிக்கையில் இருப்பது என்ன? அந்த அறிக்கையின் விடயங்களை சரியாக பார்க்க வேண்டும். அந்த அறிகை தயாரித்தபோது வட கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்று அந்த அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏக மனதாக ஆதரவு வழங்கினர்.

அந்த நம்பிக்கையில் தான் அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச மட்டத்துக்கு ஒரு செய்தியை அனுப்பக்கூடிய வகையிலே அந்த இடைக்கால அறிக்கையை தான் நிறைவேற்றப் போவதாக துணிந்து அறிவித்துள்ளார்.

அந்த இடைக்கால அறிக்கையில் இன்றைக்கு இருக்கும் ஒற்றையாட்சியை விட ஒரு இறுக்கமான ஒற்றையாட்சி முறைமையை கொண்ட பண்பாக அமைந்துள்ளதுடன் அதன் முன்னுரையில் மைத்திரியின் பேச்சின் சாரம்சமே முன்னுரையாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒற்றையாட்சி முறைமையை உலகத்துக்கு முதலில் அறிமுகப்படுத்தியது பிரித்தானியா. அங்கும் இன்று வரையும் ஒற்றையாட்சி நடைமுறையில் இருக்கிறது. அங்கு இருக்கின்ற ஒற்றையாட்சி அங்கு இருக்கக்கூடிய நான்கு இனங்களுக்கு தேச அங்கீகாரத்தை வழங்குகிறது. அது மட்டுமல்ல, அதையும் தாண்டி ஸ்கொட்லாந்து பிரிந்து போவதற்கு கூட அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆகவே, மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்குரிய ஒற்றையாட்சி அப்படிப்பட்ட பண்புகளை கொண்டதாக இருக்க முடியாது;  எனவே இலங்கைக்கு  என ஒரு ஒற்றையாட்சி முறைமையை தேடிப்பிடிக்க வேண்டும் என்றார்.

ஒரு முற்போக்குவாத சிந்தனையில் உலகத்திலே ஏனைய நாடுகளில் இருக்கக்கூடிய ஒற்றையாட்சி முறைமைகளை மாற்றி அமைத்து பல இனங்கள், தேசங்கள் கொண்ட நாடுகளில் அங்கு இருக்கக்கூடிய தேசங்களுக்கு ஒரு அங்கத்துவத்தை சமத்துவத்தை வழங்கி ஒற்றையாட்சியை அமர்த்தி வாசித்து அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை கொண்டாடி அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் போக்கு இலங்கைக்கு பொருந்தாது என இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது.

ஒற்றையாட்சியா? சமஸ்டி  ஆட்சியா என தீர்மானிப்பது ஒரு நாட்டின் இறைமையே. அந்த இறைமை எந்த வகையில் அமைந்துள்ளது என்பதை வைத்துதான் ஒற்றையாட்சியா, சமஸ்டி ஆட்சியா என நீதிமன்றங்கள் தீர்மானிக்கும்.

இலங்கைக்கு 13ஆவது திருத்தமாக கொண்டுவரப்பட்ட மாகாண சபையை நிறைவேற்ற ஆராய்ந்தபோது இலங்கையில் இருப்பது ஒற்றையாட்சி. எனவே இந்த மாகாண சபை முறைமை கூட இந்த ஒற்றையாட்சிக்குள் இருப்பதாகவும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுகின்ற முதலமைச்சர் கையில் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. மாறாக ஜனாதிபதி நியமிக்கும் ஆளுநரின் கையில்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கும். அதனால் இலங்கையின் மாகாண சபை முறைமை ஒரு ஒற்றையாட்சி முறைமையை மீறவில்லை என பிரகடனப்படுத்தியுள்ளனர்.

அந்த தீர்ப்பு 1987 வழங்கியதன் பின்னர் அதை ஆமோதிப்பதற்கு 32 வருடத்துக்கு மேலாக உச்ச நீதிமன்றம் வழங்கி இன்று இருக்கின்ற ஓற்றையாட்சியை மிக வலிமையாக உறுதிப்படுத்த கூட அது போதாது என்று இந்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றுவதற்கு அன்றை அரசாங்கம் முயற்சித்தது.

எனவே எங்களுக்கு இருக்கும் சவால்… இந்த ஆட்சியில் இருக்கும் அனுர தலைமையிலான ஜே.வி.பி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தாங்கள் ஆட்சியை  பிடிப்பதாக அவர்கள் 30 வருடங்களாக அரசியல் செய்துகொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டனர். அதில் 3 தொடக்கம் 5 வீதமான வாக்கை பெற்ற இவர்கள் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வேலை செய்து கட்டமைப்பு ரீதியாக தெற்கிலே ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு, 4 பேருக்கு மேல் பிரதிநிதியை எடுக்கமுடியாத சூழலை வைத்துக்கொண்டு அதிசயமாக ஜனாதிபதி தேர்தலில் 43 வீத வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த 43 வீதம் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டே இவர்களுடைய செயற்பாட்டையும் திட்டங்களையும் முற்று முழுதாக உள்வாங்கிக்கொண்டு  வாக்களிக்கவில்லை என அவர்களுக்கு நன்றாக தெரியும். மற்றவர்கள் இந்த நாட்டை கொள்ளையடித்து மாறி மாறி இந்த நாட்டை வங்குரோத்து நிலமைக்கு கொண்டு போயுள்ள கோபத்திலே மற்ற தரப்புக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்திருந்த சூழ்நிலையில் தான் அவர்களுக்கு வாக்களிக்காமல் இன்னொரு தரப்பான  தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கலாம் என்ற அடிப்படையில்தான் ஜனாதிபதி தேர்தலில் இந்த 43 வீத வாக்கு பெற்றனர்.

ஒரு அதிசயமாக கிடைத்த அந்த 43 வீத வாக்கை, தங்களது இருப்பை  உறுதிப்படுத்த வேண்டும்.

அந்த வாக்குகள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமாயின் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மற்றவர்களை போல தெற்கில் இருக்கும் மக்களை ஏமாற்றக்கூடாது என்பதுடன் தேர்தலுக்கு முன்பாக வைக்கும் கருத்தை தேர்தலுக்கு பின்னால் அதனை உறுதிப்படுத்துவதன் மூலமும், தான், வாக்களித்த மக்களை கவர்ந்து, நம்பிக்கையை தங்கள் மீது ஏற்படுத்தி, அவர்களை நிரந்தரமாக தங்களுடைய ஒரு வாக்கு வங்கியாக மாற்றி அமைக்கலாம்.

அந்த சூழலிலேதான்  ஜனாதிபதி அனுர மிகவும் மோசமான பிற்போக்குவாதமாக உருவாக்கப்பட்ட இந்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு நன்றாக தெரியும் வட கிழக்கில் தமக்கு செல்வாக்கு கிடையாது என. ஆனால் அந்த இடைக்கால அறிக்கை கொண்டுவரும் பொழுது தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் அதை ஆதரிப்பார்கள் என. அது தான் அவர்களுக்கு முக்கியமான தேவை.

2015 வடகிழக்கில் தெரிவு செய்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரித்தனர் என்றால் எதிர்வரும் தேர்தலிலே வரும் பிரதிநிதிகள் குறைந்தது 10 பேராவது ஆதரிப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் துணிந்து தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த இடைக்கால அறிக்கையின் நிறைவின் ஊடாக அமையும் என தெரிவித்தார்.

எனவே அனுரவுக்கு நம்பிக்கையான தரப்பு யார்? அன்று அந்த 18 பேரும் யார்? அதில் 16 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு.  அவர்கள் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும்போது சமஸ்டிக்கான தீர்வினை பெற ஆனையை வழங்குமாறு கேட்டனர். அதனை மக்கள் நம்பி அமோக வெற்றியை கொடுத்தார்கள். அதில் மட்டக்களப்பு மண் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.  அவர்கள் வென்று நாடாளுமன்றம் சென்ற அடுத்த நிமிடம் இந்த ஒற்றையாட்சிக்கு இணங்கினார்கள்.

இவர்கள் தற்போது பிரிந்து கேட்டாலும் நாடாளுமன்றத்துக்கு 10 பேர் சென்று அறுதி பெரும்பான்மை காண்பிப்பார்கள் என்பதே அனுரவின் நம்பிக்கை.

எனவே சரித்திரத்தில் முதல் தடவையாக தமிழரே ஒற்றையாட்சியை விரும்பி ஏற்றுக் கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கான ஒரு முயற்சியாக 14ஆம் திகதி தேர்தல் அமையக்கூடும்.

அந்த வரலாற்று மாற்றத்தை தடுக்கக்கூடிய ஒரே ஒரு தரப்பு எம்முடைய மக்கள். அதனால்தான் நாங்கள் இந்த தேர்தல் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்கக்கூடிய தேர்தலாக இருக்கின்றது என  எச்சரிக்கை விட்டுக்கொண்டு வருகின்றோம்.

தமிழினம் ஓர் இனவாத இனமல்ல. சிங்களவருக்கு பௌத்தத்துக்கோ நாங்கள் எதிரிகள் அல்ல. எங்களுக்கு இருப்பு பாரம்பரியம் இருப்பதை மற்றவர்கள் மதிக்கவேண்டும்.  அதேவேளை எங்களுடைய அடையாளங்களை  அங்கீகரித்து கொண்டாடவேண்டும். நீங்கள் வேறுபாடுகள் அற்ற கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதை செய்யாமல் பெரும்பான்மையாக இருக்கின்ற நீங்கள் எங்களின் இருப்பை அழிக்கின்ற வகையில், செய்வதை ஜனநாயகம் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தான் ஒற்றையாட்சி முறைமை ஒரு நாளும் ஒரு பாதுகாப்பை கொடுக்காது என இலங்கையில் ஏற்படுத்திய 3 அரசியல் அமைப்புக்களை தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளோம்.

அதனால்தான் சர்வதேசம் கூறுகிறது… போர் முடிந்து 15 வருடங்களின் பின்னரும் மாறி மாறி வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இங்கு ஒரு பயங்கரவாத பிரச்சினை மட்டும்தான் இருப்பதாக சொல்லியும் சர்வதேசம், இல்லை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் அமைப்பை ஆதரவோடு எப்போது நிறைவேற்றுகின்றீர்களோ. அன்றுதான் இந்த இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாக கருதுவோம் என்றனர்.

எனவே, இந்த அனுரவின் சதித் திட்டத்தை முறியடிக்கும் ஒரே ஒரு தரப்பு நாங்கள்தான். எனவே, 10 பேரை பிரதிநிதிகளாக அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றார்.