மாபெரும் புரட்சியாளர் சேகுவேராவின் முதுகின் பின்னே ஒளிந்திருக்கும் சிங்களப் பெளத்த பேரினவாத முகமும்

65 0

 மாற்றம் என்ற வெற்றுக்கோசமும் தமிழர் தாயகமாக இணைந்திருந்த வடகிழக்கு மாகாணத்தை …வடக்கு வேறாகவும் கிழக்கு வேறாகவும் பிரிக்கச்சொல்லி நாடாளுமன்றில் பிரேரனை சமர்ப்பித்து அதில் வெற்றியும் கண்டவர்கள் இந்த ஜே வி பி என்ற “மக்கள் விடுதலை முன்னணி” யினரே…..

தமிழர்க்கான மாகாண சுயாட்சியையே விரும்பாத இவர்களா தமிழருக்கென ஒரு தனி சுயாட்சி கிடைப்பதை விருப்புவார்கள் தனிச்சிங்கள உணர்வு மிக்க “ஜே வி பி” யினரின் தாரக மந்திரமே….

அப்பே ரட்ட….
அப்பே ஆண்டுவ…..
அப்பே ஜனதாவ……

அதாவது…..

எங்கள் நாடு…..
எங்கள் ஆட்சி…..
எங்கள் மக்கள்……

அதாவது…..

சிங்களவர் எங்கள் நாடு…..
சிங்களவர் எங்கள் ஆட்சி…….
சிங்களவர் எங்கள் மக்கள்…….

என்பதே அதன் பொருள்

அனுர நல்லது செய்வார் தமிழர்க்கு எனக் கூறிஆதரவு கொடுக்க நினைக்கும் எமது உறவுகளே கொஞ்சம் நில்லுங்கள்!
உங்கள் கவனத்திற்கு…!

செய்தி 08.10.2024*

இலங்கை தொடர்பான UN ஜெனீவா தீர்மானத்திற்கு அனுர அரசாங்கமும் எதிர்ப்பு – யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிக்கும் ஐ. நா பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது. #HRC57

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்தை நிராகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

* சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று வாராந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.*

இதில், 2024 செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

*ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன் சாட்சிகளைத் திரட்டும் பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாதிருக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
*ஜெனீவா மனித உரிமைச்சபையின் அறிக்கையில் ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்புக்கு கடும் அழுத்தம் கொடுக்கும் பரிந்துரைகள் எதுவும் இல்லை என்பது வேறு.

ஆனாலும் அதனைக்கூட…

2012 இல் இருந்து 2014 வரை மகிந்த நிரகரித்தார்
2015 இல் இருந்து 2019 வரை மைத்திரி நிராகரித்தார்
2020 இல் 2021 வரை கோட்டா நிராகரித்தார்
2023 இல் ரணில் ஏதோ கூறிக் கடத்தினார்.
2024 இல் அனுரகுமார திஸாநாயக்கவும் நிராகரித்தார்.

இப்போது ஜேவிபி எனப்படும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் ”மாற்றம்” என்ன? அநுரா என்று மார்தட்டி, கைதட்டி இதுதான் ”மாற்றம்” என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழர்கள் பலருக்கு இது புரிகிறதா?

சிங்கள அரசியல் தலைவர்கள் எவரும் 1948 இற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் குறிப்பாக 2009 இற்குப் பின்னரான சூழலிலும் கூட தங்கள் நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை

”பௌத்த தேசியம்” ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் எந்த ஒரு விட்டுக் கொடுப்பையும் செய்ய அவர்கள் தயாரில்லை.

13 ஆம் திருத்தச் சட்டம்கூட அவர்களுக்குத் துடக்கு வீடுதான்.

ஆனாலும் கட்சி, மாறி ஆள் மாறி புதிய அரசாங்கம் பதவியேற்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஈழத்தமிழர்களில் பலர் அவர்களை நம்பி அதாவது ”மாற்றம்” என்று கருதி தங்களைத் தாங்களே ஏமாற்றுகின்றனர். தங்களுக்குள் ரசித்துத் தலை முழுகாமல் இருக்கின்றனர்.

இந்த வரலாறுதான் தமிழர்களிடம் நீண்டு செல்கிறது. விஞ்சிக் கிடக்கிறது.

காரணம்? பட்டறிவு இன்மையா? அல்லது???

1994 இல் சந்திரிகாவை ”மாற்றம்” என்று நம்பிய கதை மிகப் பெரியது. அதேபோன்றதொரு பார்வைதான் இப்போது அநுரா மீது. இப் பின்புலத்தில் ”தமிழ்த்தேசியம்” என்ற கோட்பாட்டில் சில மாற்றங்களை, விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டுமென சிலர் தவறாகக் கற்பிதம் செய்கின்றனர். தமிழர்கள் யதார்த்தமாகச் சிந்திக்க வேண்டும் என்று வேறு சிலர் மூக்கால் அழுகின்றனர். ஆனால் ”மாற்றம்” ”விட்டுக்கொடுப்பு” ”சமரசம்” ”யதார்த்தம்” என்ற அரசியல் சொல்லாடல்கள் அனைத்தும் இயலாமையின் வெளிப்பாடுகள்.

”அரசு” என்ற கட்டமைப்புள்ள சிங்கள சமூகம் 1920 இல் இருந்து இன்று வரை தங்கள் நிலைப்பாட்டை மாற்றி, ஆகக் குறைந்த பட்சம் இலங்கை ”பன்மைத்துவ அரசு“ என்று கூட சொல்லத் தயங்கும் நிலையில், அநுரா எந்த வகையான மாற்றத்துக்குரியவர்??? ”அரசியல் விடுதலை” என்ற கருத்தியலில் ”மாற்றம்” அல்லது ”மாற்றுக் கருத்து” ”யதார்த்தம்” ”சமரசம்” என்ற பேச்சிற்கே இடமில்லை. அதாவது ஒரு இனத்தின் அரசியல் விடுதலைக் கொள்கைக்கும் அதற்கான தன்னாட்சி உரிமைக்கும் மதிப்புக் கொடுப்பதன் அடிப்படையில் தேசங்களுக்கு இடையிலான நட்புறவுகளை மேம்படுத்துவதை மாத்திரமே பிரதான இலக்காகக் கொண்டிருத்தல் வேண்டும். இதுதான் அரசியல் விஞ்ஞான விளக்கம்.

தன்னாட்சி உரிமை அல்லது சுயநிர்ணயம் (Self-Determination) எனப்படுவது சுயமாக, சுதந்திரமாக ஒரு மக்கள் குழு தமது அரசியல் ஏற்பாட்டை தீர்மானிக்கும் உரிமையைக் குறிக்கும்.
ஆகவே இந்த இடத்தில் ”மாற்றம்” என்ற சொல்லை எந்த அரசியல் விஞ்ஞான அடிப்படையில் புகுத்துகின்றனர்?
பலஸ்தீனியர்கள், ரோஹின்ய முஸ்லிம்கள் உள்ளிட்ட வேறு இன மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டங்களில் ”மாற்றம்” ”மாற்றுக் கருத்து” ”யதார்த்தமாகச் சிந்தித்தல்“ ”சமரசம்“ என்ற ஏமாற்றுச் சொல்லாடல்களை புகுத்தவே முடியாது.

ஆனால் 2009 இற்குப் பின்னர் இச் சொல்லாடல்கள் தமிழீழத் தமிழர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு இலங்கைத்தீவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. இதுதான் சதிக் கோட்பாடு. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதங்களை மெளனிக்கும்வரை விட்டுக் கொடுப்பு, மாற்றம், யதார்த்தம், என்ற பசப்பு வார்த்தைகளிற்கு இடமிருக்கவில்லை. தமிழர் தேசம் விழிப்புடனே இருந்தது இன்று எங்களை தோற்றுப்போன இனம் என சொல்லிச்சொல்லி சிங்களமும், இந்தியமும் உலக ஏகாதிபத்தியமும் எமது உளவுரணை சிதைக்க முயற்சி செய்கின்றனர். தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் சிந்தனை என்னும் போராயுதம் தமிழர்களின் கலங்கரைவிளக்கம், வழிகாட்டி, பாதுகாப்புக் கவசம் இது எமது உள்ளத்தை ஆக்கிரமித்திருக்கிறது. ஆகவே சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் எமது நிலங்களை மட்டுமே தற்காலிகமாக ஆக்கிரமிக்க முடியும். இலட்சியக் கோட்பாட்டை நெருங்கவே முடியாது. எனவே தேசியத்தலைவர் கூறியதைப்போல சிங்கள பௌத்த மகாவம்ச மனோநிலையில் மாற்றம் ஏற்படும்வரை எத்தகைய ஆட்சிமாற்றங்களாலும் தமிழர்களிற்கான உரிமைகளோ நிரந்தரத் தீர்வோ கிட்டப் போவதில்லை என்ற எதார்த்தமான கூற்றுக்களைப் புரிந்துகொண்டவர்களாக இலக்கு நோக்கி விடுதலை அரசியல் செய்வோமாக…..