ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் அடுத்தடுத்து உயிரிழந்த நான்கு புலம்பெயர்ந்தோர்

23 0

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நேற்று ஒருவர் உயிரிழக்க, அடுத்தடுத்து வெவ்வேறு கடற்கரைகளில் மேலும் மூன்று புலம்பெயர்ந்தோரின் உயிரற்ற உடல்கள் ஒதுங்கின.

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற ஒருவர், நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, வெவ்வேறு கடற்கரைகளில் மேலும் மூன்று புலம்பெயர்ந்தோரின் உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று உயிரிழந்தவர், Hardelot என்னுமிடத்தில் தண்ணீரில் விழுந்த 15 புலம்பெயர்ந்தோரில் ஒருவர். அவர் ஹெலிகொப்டர் மூலம் கரைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு 28 வயது என்றும், அவர் குவைத் நாட்டவராக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்கரைகளில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட மற்ற மூன்றுபேரும் எப்போது உயிரிழந்தார்கள், எங்கு தண்ணீரில் விழுந்தார்கள் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.

இந்த நான்கு பேருடன், இந்த ஆண்டு ஆங்கிலக்கால்வாய் வழியாக படகில் பிரித்தானியாவுக்குள் நுழையும் ஆசையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.