“2031-ல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு” – அண்ணாமலை கணிப்பு

19 0

“ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்துகொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 12 சதவீதத்துக்கும் கீழே போய்விடும். அது நடந்தே தீரும். அந்த இடத்துக்கு வேறு ஒரு கட்சி வரும். 2026ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக இருக்கும். 2031 திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி 40 சதவீத வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்தார். அதே போல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி 40% வாக்குகள் பெற்று ஆட்சியை தக்கவைக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிலோ 30 முதல் 35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வருகின்றன.

திராவிட சித்தாந்தங்கள் காலாவதியாகி வருவதை ஒவ்வொரு தேர்தலும் நமக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. போன தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது. இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது. இனியும் மக்கள் திராவிட கொள்கையை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதே இந்த சரிவுக்கு காரணம். 2026ஆம் ஆண்டு கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்துகொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 12 சதவீதத்துக்கும் கீழே போய்விடும். அது நடந்தே தீரும். அந்த இடத்துக்கு வேறு ஒரு கட்சி வரும். 2026ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக இருக்கும். 2031 திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றுள்ள அண்ணாமலை, படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 28-ம் தேதி தமிழகம் வரும் அண்ணாமலை, டிசம்பர் 1-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.

அதன்பிறகு, தொடர்ச்சியாக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாஜகவின் ஓட்டு வங்கியை மேலும் பலப்படுத்த, கடந்த மக்களவைத் தேர்தலின் போது நடத்திய ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை போல, ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.