மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்: இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

22 0

ஆழ்கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா, இலங்கை கூட்டுப் பணிக் குழுவின் 6-வது கூட்டம் கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்திய மீன்வளத் துறைச் செயலர் அபிலக்ஷ் லிகி தலைமையில், மத்திய மீன் வளம், வெளியுறவு அமைச்சகம், தமிழ்நாடு அரசு அதிகாரிகள், இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

இலங்கை மீன்வளத் துறைச் செயலர் விக்கரமசிங்க தலைமையில், மீன்வளத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், இலங்கை கடற்படை, கடலோரகாவல்படை, நீதித்துறை அதிகாரிகள் இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில், இரு நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு, மனிதாபிமான முறையில் தீர்வுகாண்பது என்று இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். மீனவர்களைத் தாக்கி காயம் ஏற்படுத்துதல், உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தல் கூடாது. எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இந்திய தரப்பு சார்பாக வலியுறுத்தப்பட்டது.

மேலும், மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கவும், மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரு நாட்டு மீனவர் சங்கங்களின் கூட்டத்தை விரைவில் நடத்தவும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.கொழும்புவில் நடைபெற்ற இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற இரு நாட்டுப் பிரதிநிதிகள்.