தீபாவளி விசேட பூஜைகள் !

26 0

உலகளாவிய ரீதியில் இந்துக்கள் இன்றையதினம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் நாடளாவிய ரீதியில் தீபாவளி பண்டிகை விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு  

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ புரண சுதாகர குருக்களின் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது நாட்டிற்கு நன்மைவேண்டியும் நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை நீங்கி நாடு சுபீட்சமடையவும் விசேட யாகம் மற்றும் அபிசேகமும் நடாத்தப்பட்டது.

இன்றைய தீபாவளி பூஜை வழிபாடுகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

முல்லைத்தீவு 

 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவனாலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் பொலிஸாரினால்  இன்று வியாழக்கிழமை (31) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஜி.சந்திரசேன தலைமையில். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 10 பொலிஸ்நிலைய பிரிவுகளில் இருக்கும் விஷேடமாக தமிழ்  பொலிஸார் இணைந்து தீபாவளி தினமான இன்று ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தில் பொதுமக்களுக்கும் நாட்டுக்குமாக வேண்டி விஷேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வழிபாட்டில் பொதுமக்களும், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸார் என பலரும் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

பூஜை வழிபாடுகளின் பின்னர் ஆலய வளாகத்தில் வைத்து மரக்கன்றுகளும் பொலிஸாரால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

நல்லூர்

 

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் இன்றைய தினம் வியாழக்கிழமை (31) காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதன் போது நூறுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனை தரிசித்து சென்றனர்.