தேசிய மக்கள் சக்தியின் ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்திருப்பதாலேயே தமிழ் மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த்தேசிய தலைவர்கள், பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான அவர்களது தற்போதைய நிலைப்பாடு தெற்கில் வாழும் சிங்கள மக்களை கண்திறக்கச்செய்வதாக அமையும் எனத் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என தேசிய மற்றும் சர்வதேச தரப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (29) இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித்த ஹேரத், ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது ஆராயப்படவில்லை.
அது உள்ளவாறே தொடர்ந்து நடைமுறையில் இருந்தாலும், அச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். அடுத்துவரும் புதிய பாராளுமன்றத்தில் இச்சட்டம் தொடர்பில் திருத்தங்களை முன்மொழிந்து, அவை பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் மாத்திரமே பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்திருக்கும் அவரது இக்கருத்து தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ‘தேசிய மக்கள் சக்தி இற்றைவரை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்போம் என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்துவந்திருக்கிறது.
அச்சட்டத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் வழங்கவில்லை. மாறாக இச்சட்டத்தை ஒழிப்பதாக தேசிய மக்கள் சக்தியினால் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். ஆனால் இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து வழுக்கத்தொடங்கிவிட்டார்கள்’ என விசனம் வெளியிட்டிருக்கிறார்.
அதேபோன்று புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதற் எதிர்மாறாகவே செயற்பட்டுவருவதாக சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவர்களது ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்து தான் தமிழ்மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்துவந்திருப்பதாகத் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலைப்பாடு தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கண்திறக்கச்செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இதனை தாம் முன்னரேயே எதிர்பார்த்ததாகத் சுட்டிக்காட்டிய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானம், காணி விடுவிப்பு, பயங்கரவாதத்தடைச்சட்டம் என்பன உள்ளடங்கலாக சகல விடயங்களிலும் கடந்தகால அரசாங்கங்கள் எவ்வாறு செயற்பட்டனவோ, அதே வழியில் செயற்படுவதற்கே தேசிய மக்கள் சக்தி முற்படுவதாகவும், எனவே இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் தெரிவித்தார்.