ரூ.426 கோடியில் 3,268 புதிய குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

22 0

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3,268 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து கடந்த 2021-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

இந்நிலையில், சென்னையில் குப்பைமேடு திட்டப்பகுதியில் தரை மற்றும் 7 தளங்களுடன் ரூ.85 கோடியே 73 லட்சம் செலவில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சத்தியவாணிமுத்து நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் ரூ.73 கோடியே 40 லட்சம் செலவில் 438 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், டோபிகானா திட்டப்பகுதியில் தூண் மற்றும் 5 தளங்களுடன் ரூ.31 கோடியே 76 லட்சம் செலவில் 272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், சந்திரயோகி சமாதி திட்டப்பகுதியில் தரை மற்றும் 4 தளங்களுடன் ரூ.38 கோடியே 92 லட்சம் செலவில் 240 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ராதாகிருஷ்ணபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் ரூ.25 கோடியே 80 லட்சம் செலவில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அதேபோல், ஈரோடு, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள் என மொத்தம் ரூ.426 கோடியே 32 லட்சம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3,268 குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த அரசில் இதுநாள்வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 118 திட்டப் பகுதிகளில் ரூ.4,505.40 கோடியில் கட்டப்பட்ட 39,915 அடுக்குமாடி குடியிருப்புகள், வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு, தலைமை செயலாளர் நா.முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.