அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வாக்குறுதியை அரசாங்கம் மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

26 0

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம் மக்கள் எதிர்பார்க்கும் எந்த மாற்றத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வது தொடர்பாக மாத்திரமே கதைத்து வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பதாக தெரிவித்த விடயத்தையும் அரசாங்கம் தற்போது மறுத்து வருகிறது என புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வழிடத்தல் காரியாலயத்தில் செவ்வாய்கிழமை (29)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் மக்கள் எதிர்பார்த்த எந்த மாற்றமும் இதுவரை இடம்பெறவில்லை. ஆனால் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இல்லாமல்  செய்யும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகிறது. அது தொடர்பாக மாத்திரமே ஜனாதிபதியும் கதைத்து வருகிறார். ஆனால் இதனையும்விட நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக எடுத்த சில தீர்மானங்கள் காரணமாக பாெருட்களின் விலை அதிகரித்தது. ஆனால்  பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. என்றாலும் பொருட்களின் விலை அதிகரிப்பை சுட்டிக்காட்டியே ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு மாதம் கடந்தும் அத்தியாவசிய எந்த பொருட்களின் விலையும் குறையவில்லை. என்றாலும் மக்கள் அதிகம் பயன்கடுத்தும் பருப்பு, நெத்தலி, டின் மீன் போன்ற போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று அரச ஊழியர்களின் சம்பத்தை அதிகரிப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கு அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டது. அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.என்றாலும் அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது, அரச ஊழிர்களிக் சம்பன அதிகரிப்பை  6மாதங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அமைச்சர் விஜித் ஹேரத் அதனை தற்போது மறுத்து வருகிறார். அதேநேரம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என தற்போது ஜனாதிபதியும் தெரிவித்து வருகிறார். இது அவர்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க எப்போதும் ஜனரஞ்சகமான தீர்மானங்களை ஒருபோதும் எடுத்ததில்லை. அவரால் செய்ய முடியுமான விடயங்களை மாத்திரமே மக்களுக்கு அறிவிப்பார். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்திலும் ரணில் விக்ரமசிங்க அவசரப்பட்டு அறிவிக்கவில்லை. மாறாக அதுதொடர்பாக ஆராய குழு ஒன்றைத்து, அந்த குழுவின் பரிந்துரைக்கமையவே நடவடிக்கை எடுத்திருந்தார் என்றார்.