பிரான்சில் உணர்வடைந்த லெப்.கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல்!

85 0

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவன ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த (26.10.2024) சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் பிரான்சில் இம் மாவீரர்களின் கல்லறை அமைந்துள்ள பந்தன் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக குறித்த மாவீரர்களின் கல்லறைமீது தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பொதுச்சுடரினை மாவீரர் பணிமனை உறுப்பினர் திரு.குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
கப்டன் கஜன் அவர்களின் கல்லறைக்கு கஜனின் ககோதரர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தனர். லெப்.கேணல் நாதனின் கல்லறைக்கு 23.04.1987 அன்று யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.நிலானின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றிவைக்க, 1987 அன்று யாழ்.கோண்டாவில் பகுதியில் வீரச்சாவடைந்த வீரவேங்கை சூட்டி அவர்களின் சகோதரர் மலர்மாலை அணிவித்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். நினைவுரையினை தமிழ்ச் சோலை மாணவனான செல்வன் இராஜ்குமார் இளங்கதிர் அவர்கள் ஆற்றி இருந்தார்.தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -ஊடகப்பிரிவு )