ஏறாவூர் மீராங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

28 0

ஏறாவூர் மீராங்கேணி பகுதியில் 11,230 மில்லிகிராம் ஹெரோயின்  போதைப்பொருளுடன்  போதைபொருள் வியாபாரி ஒருவரை கைது செய்த போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன்  பொலிஸார் மீது  தாக்குதலை மேற்கொண்ட  பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று திங்கட்கிழமை (28) இரவு இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியிலுள்ள வீடொன்றினை சுற்றிவளைத்த போது போதைபொருள் வியாபாரி ஒருவர் 11,230 மில்லிகிராம் ஹெரோயின்  போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரின்  கடமைக்கு இடையூறு விளைவித்து பொலிஸாரின்  மீது தாக்குதல் மேற்கொண்ட 36 வயதுடைய பெண் ஒருவர்,24 வயதுடைய ஆணொருவர்  மற்றும்  போதைபொருள்  வியாபாரி  ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.