தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தோட்டப்பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். எதிரணி கட்சிகள் ஒன்றிணைந்து பணம் வழங்கி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஆயிரம் ரூபாவை அவர் மூலம் வழங்கினர்.
ஆனால் மக்கள் அதை புறக்கணித்து தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். அதே போன்று பாராளுமன்றத் தேர்தலிலும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. எமக்கு இலவச பிரச்சாரங்களை முன்னெடுக்கும் எதிரணி மலையக கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி கூற வேண்டும் என கொட்டகலை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ராஜா தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ராஜா. கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மலையக அரசியல் கட்சிகள் கடந்த காலங்களில் தாம் என்ன செய்தன என்பதைப்பற்றி கதைக்காமல் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என கற்பனை கதைகளை மக்களிடம் கூறி வருகின்றனர். இது எமக்கு இலவச பிரச்சாரமாகும்.
மேலும் ஒரு பிரதான கட்சியானது தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொள்வோம் என்றும் ஆகையால் தனித்துவம் காக்க தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கெஞ்சி வாக்கு கேட்கிறது.
யாரை சேர்க்க வேண்டும் என்பதை எமது கட்சி தான் தீர்மானிக்கும். அதை எப்படி இவர்கள் முடிவு செய்ய முடியும்? கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைகளிலிருந்து பாராளுமன்றம் வரை இவர்கள் அடித்த கொள்ளைகள் பற்றிய சகல விபரங்களும் எம்மிடம் இருக்கும் போது எவ்வாறு இவர்களை நாம் இணைத்துக்கொள்வோம்? ஆகவே இவர்கள் கனவு காண கூடாது.
இவர்கள் மக்களுக்கு உண்மையிலேயே சேவையாற்றியிருந்தால் களத்துக்கு வராமலேயே வெற்றி பெறலாம். ஆனால் இவர்கள் மக்களை ஏமாற்றி தமக்கு சொத்துகளை சேர்த்துக்கொண்டனர். எனவே இவர்களுக்கு மக்கள் நல்ல பாடத்தை நிச்சயம் புகட்டுவர் என்றார்.