முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் வாகனம் விபத்தில் சிக்கியவேளை அதனை படம்பிடித்த நபருக்கு எதிராக பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் விபத்துக்குள்ளான வாகனத்தில் ஆயுதங்கள் காணப்பட்டதால் பொதுமக்கள் அதனை படமெடுத்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் ஏழாம் திகதிக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது அனுமதிப்பத்திரம் உள்ளவர்களிற்கும் இந்த வேண்டுகோள் பொருந்தும் என தெரிவித்துள்ள அமைச்சர் சிலர் ஆயுதங்களை மீள ஒப்படைக்கவில்லை அவ்வாறான ஆயுதங்களை பொது இடத்தில் காணும்போது மக்கள் குரல் எழுப்புவதை தவிர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அந்த இடத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் செயற்பட்ட விதத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் வீடியோ எடுத்த நபரை மிரட்டினார்அது தவறு அவர் அப்படி செய்ய முடியாது,எவருக்கும் வீடியோ எடுப்பதற்கான உரிமையுள்ளது என தெரிவித்துள்ளார்
சம்பவம் இடம்பெற்ற இடம் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.