வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு: உயிரிழப்போர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

19 0

தமிழகத்தில் வெப்ப அலையை மாநில பேரிடராக அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையால் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் வாட்டியது. வெயிலின் தாக்கத்தால் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்ததாவது:

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும் வெப்ப அலை வீச்சும் நிலவியது. வெப்ப அலையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க பொது இடங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பது, ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வழங்குவது, திறந்தவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களது நலன் கருதி பணி நேரத்தை மாற்றி அமைப்பது, வெப்ப அலை காரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைப்பது, உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.

எனவே மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி, வெப்ப அலை பாதிப்புக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கவும், உரிய நிவாரண வழங்கவும், வெப்ப அலை வீச்சை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்த வருவாய் நிர்வாக ஆணையர், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 16 நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸூக்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 44 டிகிரி, வேலூரில் 43.7 டிகிரி, ஈரோட்டில் 43.6 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 31 நாட்கள், கரூரில் 26 நாட்கள், வேலூரில் 23 நாட்கள், தலைநகர் சென்னையில் 6 நாட்கள் 40 டிகிரி செல்சியஸூக்கு மேல் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதனால் முதியோர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் உள்ளிட்டோரின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு வெப்ப அலை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வெப்ப அலை மேலாண்மை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி, பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதன்படி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூக நல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 1,038 தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டன.

எனவே வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவிக்க வேண்டும். பொருத்தமான அதிகாரம் கொண்ட அமைப்பால் ஆய்வு செய்து, வெப்ப அலையால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படும் பொதுமக்கள், வெப்ப அலை நிவாரண பணியின்போது ஈடுபடுத்தப்படும் பணியாளர்கள் ஆகியோருக்கு நிவாரணமாக, மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கருத்துவில் கூறப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்த கருத்துருவை கவனமாக பரிசீலித்த அரசு, வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து, வெப்ப அலையால் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.