எதிரிக்கு வலிமையை புரியவைக்க வேண்டும் – ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கருத்து

43 0

ஈரானின் வலிமையை எதிரிக்கு (இஸ்ரேல்) புரிய வைக்க வேண்டும் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி தெரிவித்துள்ளார்.

கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின. அப்போது ஈரானின் ரேடார் சாதனங்கள், ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், ராணுவ தளங்கள் மீது சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் 4 ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது.

பேரழிவு ஏற்படவில்லை: உயிரிழந்த வீரர்களின் உறவினர் கள் ஈரான் மதத் தலைவர் அயத் துல்லா அலி கமேனியை சந்தித் தனர். அவர்கள் மத்தியில் கமேனி பேசியதாவது: கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கு தல் நடத்தின. மிகப்பெரிய அள வில் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரானில் பேரழிவு ஏற்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. இது உண்மை கிடையாது. ஈரானில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அதேநேரம் இஸ்ரேலின் தாக்குதலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் ஈரான் குறித்து தப்புக் கணக்கு போட்டு வருகின்றனர். ஈரானின் வலிமையை எதிரிக்கு (இஸ்ரேல்) புரிய வைக்க வேண்டும். இதை செய்ய வேண்டியது ஈரான் அரசின் கடமை ஆகும். நாட்டை காக்க இளைஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தவறுகளை திருத்த வேண்டும்: கடந்த கால ஆட்சியாளர்களின் தவறால் சில மோசமான விளைவுகளை சந்திக்க நேர்ந்தது. அந்த தவறுகளை திருத்தி துணிச்சலாக முன்னேறி செல்ல வேண்டும். பொருளாதாரம், பாதுகாப்பு, ஆயுத உற்பத்தியில் ஆட்சியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அமெரிக்காவும், உலக நாடுகளும் இஸ்ரேலை கண்டிக்க மறுக்கின்றன. காசா, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. போர் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு கமேனி தெரிவித்தார்