‘ மாற்றத்தை ஏற்றுக் கொள்வோம் போராட்டத்தை கைவிடாமல் இருப்போம்’

28 0

‘ மாற்றத்தை ஏற்றுக் கொள்வோம் போராட்டத்தை கைவிடாமல் இருப்போம்’ என்ற தொனிப் பொருளில் ஞாயிற்றுக்கிழமை  (27)  சீதுவை, ரத்தொழுகம காணாமல் போனவர்களின் நினைவு தூபிக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான 34 ஆவது வருடாந்த நினைவேந்தல்  நிகழ்வு இடம்பெற்றது. 

இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி  அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் ஜனாதிபதி வருகை தரவில்லை. ஜனாதிபதியின் கட்சியை சார்ந்த ஆசிரியர் தொழிற்சங்க தலைவரும் வேட்பாளருமான மஹிந்த ஜயசிங்க அங்கு வருகை தந்திருந்தார்.

அத்துடன் சர்வ மத தலைவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வடக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த காணாமல் போனோரின் குடும்ப அங்கத்தவர்கள் உடபட பலரும் அங்கு வருகை தந்திருந்தனர்.

காணாமல் போனோரின் குடும்பம் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. காணாமல் போனோரின் குடும்பம் ஒன்றியம் சார்பில் மட்டக்களப்பிலிருந்து வருகை தந்த செல்வராஜா அரியமலர் ஜனாதிபதியின் பிரதிநிதியான மகிந்த ஜயசிங்கவிடம் காணாமல் போனோர் தொடர்பாக கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் கையளித்தார்.

அங்கு வருகை தந்தவர்கள் நினைவு தூபிக்கு முன்பாக மலராஞ்சலி  செலுத்தினர். பலர் அழுததையும் காணக் கூடியதாக இருந்தது.

நிகழ்வின் இறுதியில் காணாமல் போனோரின் குடும்பம் ஒன்றியதின் ஏற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னான்டோ உரையாற்றினார். அவர் உரையாற்று கையில் ஜனாதிபதியின் வருகையை தாங்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்ததாகவும் அவர் வருகை தராதது பலத்தை ஏமாற்றத்தை  இங்குள்ளவர்களுக்கு தந்ததாகவும் இந்த அரசாங்கத்திலாவது இந்த விடயம் தொடர்பில்  நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரபல சிங்கள பாடகர் ஜயதிலக்க  பண்டார மனித உரிமைகள் தொடர்பான பல பாடல்களை தமிழிலும் சிங்களத்திலும் அங்கு பாடினார்.