பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது

20 0

பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

எதிர்வரும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய பெருந்தொகையான மக்கள் தினமும் வருகின்றனர்.

இதனையடுத்து, ஹட்டனில் உள்ள உணவகங்களில் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று அவசர சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

உணவக உரிமையாளர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததோடு, மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த கடையின் உரிமையாளர் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதாகவும், ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் தலைவரும் தமக்கு ஆதரவளிப்பதாகவும் கூறி, பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரப்படுவதாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மத்தியில் தேவையற்ற தொழில்சார் அமைதியின்மையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.