ரூ.1 கோடி செலவிட்ட நிலையில் பிஎச்.டி படிப்பிலிருந்து தமிழக மாணவியை வெளியேற்றிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

31 0

ரூ.1 கோடி செலவிட்ட நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பிஎச்.டி. படிப்பிலிருந்து என்னை வெளியேற்றிவிட்டது என தமிழக மாணவி குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பாலகிருஷ்ணன். இவர் 2 முதுகலை பட்டப் படிப்பை இந்தியாவில் முடித்துள்ளார். அதன் பிறகு ஆங்கிலத்தில் ஆய்வுப் படிப்புக்காக (பிஎச்டி) இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. ஆனால் 4-வது ஆண்டில் பிஎச்டி படிப்பில் இருந்து அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து லட்சுமி பாலகிருஷ்ணன் கூறும்போது, “நான் பிஎச்.டி. படிப்புக்காக ரூ.1 கோடிக்கு மேல் செலவிட்டேன். இந்நிலையில், 4-ம் ஆண்டில் என்னுடைய அனுமதி இல்லாமல் அந்தப் படிப்பில் இருந்து என்னை நீக்கிவிட்டு முதுகலை படிப்புக்கு மாற்றி விட்டார்கள். பிஎச்.டி படிப்பதற்காகத்தான் நான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். இன்னொரு முதுகலை பட்டம் பெறுவதற்காக அல்ல.

இதுகுறித்து அடுத்தடுத்து மேல்முறையீடு செய்தேன். ஆனாலும் என்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். நான் மிகவும் மதித்த ஒரு கல்வி நிறுவனம் என்னை கைவிட்டுவிட்டது” என்றார்.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஆய்வு படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்கள் நிலையை உறுதிப்படுத்த நிலையான கல்வி செயல்திறனை நிரூபிக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எல்லா மாணவர்களும் அவ்வாறு நிரூபிப்பது இல்லை. அதேநேரம் ஆய்வுப் படிப்பிலிருந்து பாதியிலேயே நீக்கப்பட்ட மாணவர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.