குமரியில் நீடிக்கும் கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க மீண்டும் தடை

17 0

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருகிறது. இன்று (அக்.26) காலையில் மழை குறைந்திருந்த நிலையில், திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாயத்தை தாண்டி நிரம்பியுள்ள நிலையில், மழை அதிகரித்தால் எந்நேரமும் அணைகளில் இருந்த தண்ணீர் திறந்து விடப்படலாம். எனவே அணைகள், ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகபட்சமாக குளச்சலில் 92 மிமீ., மழை பெய்தது. பூதப்பாண்டியில் 75 மிமீ., அடையாமடையில் 68, பெருஞ்சாணியில் 64, புத்தன் அணை, ஆனைகிடங்கில் தலா 62, பாலமோரில் 61, நாகர்கோவிலில் 60, குருந்தன்கோட்டில் 58, தக்கலையில் 57, சிற்றாறு ஒன்றில் 56, குழித்துறையில் 55 மிமீ., மழை பதிவானது.
மழையால் குமரி மாவட்டத்தில் இன்று 3-வது நாளாக ரப்பர் பால்வெட்டும் தொழில், மீன்பிடி தொழில், மற்றும் பிற தொழில்கள் பாதிக்கப்பட்டன.

தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்காக நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், கருங்கல், திங்கள்நகர், குலசேகரம், களியக்காவிளை உட்பட பல முக்கிய பகுதிகளில் கூட்டம் அதிகரித்த நிலையில் மழையால் கடைகளில் கூட்டம் குறைந்தது.தொடரும் கனமழையால் குமரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.29 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 1,586 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 261 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 66 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 1,624 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 310 கனஅடி தணணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு ஒன்று அணையில் 15.84 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 158 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் நீர்வரத்து அதிகரிக்கலாம். அப்போது அதிகமான தண்ணீர் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் திறந்துவிட வாய்ப்புள்ளது. இந்நிலையில், இன்று காலை திற்பரப்பு பகுதியில் மழை குறைந்திருந்ததால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆபத்தை உணராமல், ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். ஆனால், மழை மதியத்திற்கு பின்னர் தொடர்ந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பகல் 2.30 மணியளவில் திற்பரப்பு அருவியில் மீண்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.