உதயநிதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் சர்ச்சை: பாஜக, பாமக தலைவர்கள் விமர்சனம்

26 0

தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பிழையாக பாடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் புத்தாய்வு திட்ட பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அங்கு இருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அப்போது, ‘திகழ்பரதக் கண்டமிதில்’ என்பதற்கு பதிலாக, ‘கண்டமதில்’ என்றும், ‘புகழ்மணக்க’ என்பதற்கு பதிலாக, ‘திகழ்மணக்க’ என்றும் அவர்கள் பிழையாக பாடினர். இதையடுத்து, பிழையின்றி பாடுமாறு அவர்களை துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார். மீண்டும் பாடியபோதும், அதேபோல பிழையாகவே பாடினர். இதனால், நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ‘‘தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை. அவர்கள் பாடும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால், இரண்டு மூன்று இடங்களில் அவர்களது குரல் கேட்கவில்லை. எனவே, மீண்டும் சரியாக பாட வைத்தோம். நிறைவாக தேசிய கீதமும் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தேவையின்றி மீண்டும் பிரச்சினையை கிளப்பாதீர்கள்’’ என்று கூறினார்.

சென்னை டிடி தொலைக்காட்சியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை பாடாமல் விட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ‘ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். துணை முதல்வர் உதயநிதி மற்றும் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் அதேபோல நிகழ்ந்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளதாவது:

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: தவறு நடந்தால் சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வதுதான் நல்ல தலைவருக்கு அழகு. ஆனால், டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டும்கூட, அதை வைத்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அரசியல் செய்தனர். இப்போது துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் 2 முறை பாடியபோதும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகவே இருந்துள்ளது. இப்போது, முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார். துணை முதல்வர் உதயநிதி பதவி விலகுவாரா?

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்: ஆளுநர் மீது இனவெறி சாயம் பூசிய முதல்வர், தற்போது உதயநிதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா: ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற வரி விடுபட்டபோது, ஆளுநரை வாபஸ் பெற வேண்டும் என்றார் முதல்வர் ஸ்டாலின். கடவுள் இருக்கிறார் என்பது ஒரே வாரத்தில் நிரூபணம் ஆகிவிட்டது. நீங்கள் எரிந்த பந்து அதே வேகத்தில் உங்களை வந்து தாக்கியுள்ளது. ஸ்டாலினுக்கு தமிழ் பற்று இருந்தால், மகன் என்றும் பாராமல் அமைச்சர் பொறுப்பில் இருந்து உதயநிதியை நீக்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: ஆளுநர், துணை முதல்வரின் நிகழ்ச்சிகளில் நடந்தது மனித பிழைகள்தான். உள்நோக்கம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் டிடி தொலைக்காட்சியில் நடந்ததை சர்ச்சை ஆக்கியதால், தற்போது இன்னொரு தரப்பினர் சர்ச்சை ஆக்குகின்றனர். இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க, தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பிழையின்றி பாட பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களில் முறையான பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாடவைக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.