கட்சி அரசியலில் ஈடுபடும் ஆலிம்கள் தேர்தல் பிரசாரங்களின்போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை பயன்படுத்துவது ஜம்இய்யாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது; பிழையானது என்பதுடன் உலமா சபையின் பெயரை எந்தக் கட்டத்திலும் எந்த நிலையிலும் தங்களது பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இன்றையதினம் (25) உலமா சபை வெளியிட்ட ஊடகச் செய்தியினூடாகவே இவ்வாறு அறிவித்துள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அரசியல் சார்பற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும் என்பதுடன் இதில் எமது நாட்டின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆலிம்கள் அங்கத்தவர்களாக உள்ளனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் அங்கத்துவர்கள் எவராவது, கட்சி அரசியலில் ஈடுபடுவார்களாயின் அது அவர்களது ஜனநாயக உரிமை மற்றும் தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் அமைந்ததே தவிர, அது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதித்துவமாக கணிக்கப்படமாட்டாது என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருகிறோம்.
அவ்வாறு கட்சி அரசியலில் ஈடுபடும் ஆலிம்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரை பயன்படுத்துவது ஜம்இய்யாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதனால் அவ்வாறு பயன்படுத்தி பிரச்சாரங்களைச் செய்வது பிழையான செயலும் கண்டிக்கத்தக்க செயலுமாகும் எனத் தெரிவிப்பதுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை எந்தக் கட்டத்திலும் எந்த நிலையிலும் தங்களது பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என கண்டிப்புடன் அறிவிக்கின்றோம்.
அத்துடன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் ஏனையோரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை பயன்படுத்தி பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாம் என்று வினயமாக வேண்டிக்கொள்கின்றோம்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகம் மற்றும் மாவட்ட பிரதேசக் கிளைகள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அனுசரனை வழங்குவதில்லை என்பதை மிக உறுதியுடன் அறிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது.