லெபனானுக்கு பிரான்ஸ் ரூ.900 கோடி நிதியுதவி: அதிபர் மேக்ரான் அறிவிப்பு

22 0

போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு பிரான்ஸ் சார்பில் சுமார் ரூ.900 கோடி உதவியாக வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு இடையிலான போரினால் லெபானில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில் லெபனானுக்கு பிரான்ஸ் சார்பில் 10 கோடி யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 908 கோடி) வழங்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “லெபனான் மக்களுக்கும், போரினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், அவர்களுக்கு உதவி செய்யும் சமூகங்களுக்கும் பெரிய அளவிலான உதவி உடனடியாக தேவைப்படுகிறது” என்றார்.

லெபனான் மக்களுக்கு உதவிட உடனடியாக 42.6 கோடி டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 3,582 கோடி) தேவைப்படுவதாக ஐ.நா. அறிவித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த நிதியை திரட்ட முடியும் என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிதி திரட்டுவோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிதியுதவி மட்டுமின்றி லெபானின் இறையாண்மையை மீட்கவும் அந்நாட்டின் அமைப்புகளை வலுப்படுத்தவும் உதவி தேவைப்படுவதாக பிரான்ஸ் கூறியுள்ளது.