மும்பையிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என வெளியான தகவல்களை அடுத்து, விமானம் முன்கூட்டியே தரையிறக்கப்பட்டு, சகல பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை (24) இந்தியாவின் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கொழும்பில் பி.ப 3.15 மணிக்குத் தரையிறங்கவிருந்த விஸ்தாரா யு.கே 131 விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் தகவல்கள் வெளியானதையடுத்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய நிர்வாகத்தினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 107 பயணிகள், ஒரு குழந்தை மற்றும் 8 விமானப் பணியாளர்களைக் கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட விமானம் பி.ப 2.55 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டு, சகல பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதன்போது விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் (இலங்கை) தனியார் லிமிடெட் உள்ளடங்கலாக பாதுகாப்புடன் தொடர்புடைய சகல கட்டமைப்புக்களாலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்பற்றப்படவேண்டிய நியமங்கள் மற்றும் வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் விமானசேவைகள் எவ்வித தடையுமின்றி மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளன.