பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் இந்தியாவின் தீர்மானத்துக்கு மோடி மகிழ்ச்சி

15 0

இந்திய அரசாங்கத்தால் பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டமையைக் குறிக்கும் முகமாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்வில் இணைந்திருந்த கொழும்பிலுள்ள அறிஞர்கள் மற்றும் துறவிகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

“இந்திய அரசாங்கம் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியமை புத்த பெருமானின் சிந்தனைகளை பின்பற்றுபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியின் உத்வேகத்தை தூண்டியுள்ளமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் அறிஞர்கள் மற்றும் துறவிகளுக்கு நன்றி” என பிரதமர் மோடி அவர்கள் தனது “ எக்ஸ்” தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் ‘செம்மொழியாக பாளி” என்ற தலைப்பிலான குழுநிலைக் கலந்துரையாடல் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டேயும் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வின் ஆரம்ப உரையினை கங்காராமை விகாரையின் பிரதம விகாராதிபதி கிரிந்தே அஸாஜி தேரர் வழங்கியதுடன் அதனை அடுத்து குறித்த தலைப்பிலான குழுநிலை கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் கீர்த்திமிக்க புலமையாளர்களான தென் பீஹாரின் புத்தகயாவிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசியர் ஆனந் சிங் (வீடியோ மூலமாக), பாளி மற்றும் பௌத்த கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிலையத்தின் பௌத்த கலாசாரத் திணைக்களத்தின் சங்கைக்குரிய பேராசிரியர் மிரிஸ்வத்தை விமலஞான தேரர், இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பாளி திணைக்களத்தின் பேராசிரியர் சங்கைக்குரிய கோனாதெனிய பன்ணரத்தன தேரர், களனி பல்கலைக் கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் திணைக்களத்தின் சங்கைக்குரிய கலாநிதி தெனியாயே பன்னலோக புத்தரகித்த தேரர் மற்றும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் பௌத்த கற்கைகள் திணைக்கத்தின் சங்கைக்குரிய கலாநிதி எம் சுகதசிறி தேரர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவை ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவென இலங்கை அறிஞர்கள் பாராட்டியதுடன், பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக இது அமைவதாகவும் அவர்கள் இந்த முயற்சியை சுட்டிக்காட்டியிருந்தனர்.