மாற்றத்தை விரும்புவது மட்டுமல்ல மாற்றத்தை நடைமுறையிலும் உருவாக்க வேண்டும்

19 0

பல்லினச் சமூகங்களின் இருப்பையும் அடையாளத்தையும் அழிப்பதையோ, மீறுவதையோ ஏற்கமுடியாது. ஆனால் மாற்றம், முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு என்ற அழகிய சொல்லாடலின் மூலம் எம்மை – தமிழ்பேசும் சமூகத்தினை அரசியல் அநாதைகளாக்குவற்கான முயற்சிகள் நடக்கின்றன. இதனால் தமிழ்பேசும் சமூகங்கள் பாதிக்கப்படும்  அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அனுமதிக்கவே முடியாது. மாற்றத்தை விரும்புவோராக மட்டுமல்ல, அந்த மாற்றத்தை நடைமுறையில் உருவாக்க வேண்டும் என்பதே எமது அரசியல் இலக்காகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் .கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (23) கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஏற்கனவே, மாற்றத்துக்கான அரசியற் தளத்திலேயே பணியாற்றிவருகிறோம். தொடர்ந்தும் அந்த அடிப்படையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் எந்த மாற்றமும் தனியொரு இனத்தின் நலனை மட்டும் முதன்மைப்படுத்தி நடப்பது பொருத்தமானதல்ல. அல்லது, ஏனைய இனங்களின் பிரதிநிதித்துமில்லாமல் நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் அதை நாம் அனுமதிக்கவும் முடியாது.

ஆட்சியாளர்கள் அதிகாரத்துக்கு வர முன் பேசுவதும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் செயற்படுவதும் வேறாக இருக்கும் என்பதை நாம்  நன்றாக அறிவோம். தற்போதைய ஆட்சியாளர்கள் இதை எந்தளவுக்கு மாற்ற முடியும் என்பது கேள்வியே. அப்படி ஒரு மாற்றம் வந்தாலும் அதில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு என்னதீர்வு கிட்டும்? என்பதைப் பற்றி யாருக்காவது தெரியுமா?

எனவேதான் நாம் இந்த நாட்டில் வாழும் பல்லின மக்களுக்குரிய உரிமைக்கும் எமது மக்களின் ஜனநாயக அடிப்படைக்குமாக போராடுகிறோம். தேர்தலும் ஒரு போராட்டக்களம்தான் அந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைய வேண்டும். எங்களுடைய மக்களுக்கு  வெற்றி கிடைப்பதற்காக நாம் வெற்றியைப் பெறவேண்டும்.

வெறும் அறிக்கை அரசியலை நாம் செய்யவில்லை பாராளுமன்றத்தில் உணர்ச்சி பேச்சுக்களை பேசும் அரசியலையும் நாம் மேற்கொள்ளவில்லை  மக்களின் தேவைகளை அறிந்து அவர்கள் என்ன நோக்கத்திற்காக எம்மை தெரிவு செய்து அனுப்புகின்றார்களோ அந்த நோக்கத்திற்கு ஏற்ப செயற்பட்டிருக்கின்றோம்,எதிர்காலத்திற்கும் அவ்வாறே செயற்படுவோம் எனத் தெரிவித்த சந்திரகுமார் அவர்கள்  இந்த தேர்தலில் மக்களின் தெரிவு நானாக இருப்பினும்  வெற்றிபெறுவது மக்களாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.