நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதல் முயற்சியாக மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார். அந்த மாநாடு வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில விடுதலை சிறுத்தை கட்சியின் அமைப்பாளர் தேவ பொழிலன் சகோதரர் பூபாலன் உருவப்பட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி உட்பட தமிழகம் முழுவதும் மது ஒழிப்பு மகளிர் குழு ஒன்றை ஒன்றியம் தோறும் கட்டமைக்க திட்டமிட்டுள்ளோம். தேசிய அளவில் மது ஒழிப்பு கொள்கை வரையறுக்கப்பட வேண்டும். புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த யூனியன் பிரதேசம் மத்திய அரசின் அனுமதியோடுதான் மது வியாபாரத்தை செய்கிறது.
இதனால் ஏராளமான இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுகின்றனர். மனிதவளம் பாழாகிறது. ஆகவே மாநில அரசுகளுக்கான பிரச்சினையாக இதை நாம் சுருக்கி பார்த்துவிட முடியாது. மது மற்றும் போதைப்பொருள் புழக்கம் தேசிய பிரச்சினை. எனவே தேசிய அளவில் இதனை அணுக வேண்டிய தேவை இருக்கிறது. அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தேசிய அளவில் நம்மால் மது மற்றும் போதைப் பொருட்களை ஒழித்துக்கட்ட முடியும். புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டு முறை, முறையாக பின்பற்றப்படவில்லை.
இதனை நீதிமன்றங்களே கண்டித்திருக்கின்றன. எனவே எஸ்சி, எஸ்டி சமூகத்துக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி மண்ணை சார்ந்த பெண்மணிகளின் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க புதுச்சேரி அரசு முன்வர வேண்டும். மக்களவை தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே மாநிலப் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே இருக்கக் கூடாது. அதற்கு வேறு சில அளவுகளும் தேவைப்படுகிறது என்பதனை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை என்ற ஒன்றை அளவுகோளை கொண்டதாக இருக்க்கூடாது. தமிழகம் போன்ற தென்மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் வரையறைகள் அமைய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்தவொரு சமூகத்துக்கும் எதிராக இதுவரை செயல்பட்டதில்லை. தொடக்கத்தில் இருந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி அருந்ததியர் சமுகத்துக்கு எதிரானது என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். அவர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் அண்மையில் திட்டமிட்டு ஒரு அவதூரை பரப்பியிருக்கிறார். அவரே ஆட்களை ஏற்பாடு செய்து கேள்வி கேட்க வைத்து, அதற்கு அவர் விளக்கம் சொல்லுகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் இதில் வெளிப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடவுளை வழிபட்ட பிறகே தீர்ப்பு கொடுக்க முடிந்தது என்று கூறியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கடவுள் நம்பிக்கை என்பது வேறு, நீதி பரிபாலனம் என்பது வேறு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது முக்கியமான கடமை. படித்த சட்டம், சாட்சிகளை, வாதங்களை பார்க்காமல் சாட்சியங்களை கேட்காமல் கடவுள் என்ன சொல்கிறாரோ அதுதான் எனக்கு முதன்மை என்று சொல்லக்கூடிய நிலைபாடு என்பது அனைத்து நம்பிக்கைகளையும் தகர்க்கக்கூடியதாக இருக்கிறது.
இது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் வெளிப்படையாக கண்டிக்கும் அளவில் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் இருப்பது வேதனை அளிக்கிறது. இதன்பிறகாவது அப்படி விமர்சனங்கள் எழாத வகையில் அங்குள்ளவர்கள் நடந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் இப்போது பெரிய அளவில் மழையோ, வெள்ளமோ எதுவும் இல்லை. ஆனால் அரசின் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு விமர்சனம் என்ற பெயரால் கலங்கத்தை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதல் முயற்சியாக மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார். அந்த மாநாடு வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.