ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு என்ற எமது அணி அப்பழுக்கற்றது. எமது அணியின் அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், இணைப்பாளர்கள் மற்றும் பேட்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் எவராலும் குற்றம் சுமத்த முடியாத, எவராலும் குறை காண முடியாதவர்களாக கறைபடியாத கரங்களைக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
ஏனைய கட்சிகள் மீதும் அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் என் மீது அல்லது எமது அணியினர் மீது அவ்வாறான எந்த ஒரு குற்றச்சாட்டுக்களையோ அல்லது விமர்சனங்களையோ எதிர்கொள்ளாதவர்கள் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பண்டாரவளை நாய பெத்த தோட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
முதன்மை வேட்பாளர் அரவிந்தகுமார் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இம்முறை இடம் பெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் மிகவும் வித்தியாசமானதும் நமது மக்கள் சிந்தித்து வாக்களிக்க கூடியதுமான தேர்தலாக அமைந்திருக்கிறது.
அந்த காரணங்களின் அடிப்படையிலேயே நாம் இம்முறை வித்தியாசமாக சிந்தித்து தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்தோம். தனித்துப் போட்டியிடுவதற்கு தீர்மானித்த போதிலும் அந்த தீர்மானமானது ஆதரவாளர்கள் ஆலோசகர்கள் புத்திஜீவிகள் ஆகியோரின் வழிகாட்டலின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டது.
இங்கு ஒரு விடயத்தை கூறி வைக்க விரும்புகிறேன். இம்முறை பல தேசிய கட்சிகள் களத்தில் குதித்திருக்கின்றன அதேபோன்று அந்த தேசிய கட்சிகளில் பல தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இருந்தபோதிலும் தமிழ் வேட்பாளர்கள் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அரிதாகவே காணப்படுகின்றன என்று கூறுவதைவிட அப்படியான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறுவதே பொருத்தமானதாகும்.
இவ்வாறான நிலைமைகளை ஆராய்ந்த போது பதுளை மாவட்டத்தில் தேசிய கட்சிகளை விடுத்து தனித்து போட்டியிட்டால் மாத்திரமே ஒரு தமிழ் வேட்பாளரையேனும் வெற்றி பெற செய்யக்கூடியதான நிலைமை காணப்படுகிறது.
இம்முறை பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவதா இல்லையா என்றதொரு இக்கட்டான நிலைமை தோற்றம் பெற்றிருந்தது. இருப்பினும் பதுளை மாவட்டத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவம் அவசியம் என்ற நிர்பந்தம் மற்றும் அழுத்தங்களின் காரணத்தால் தனித்து போட்டின்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு நானும் இணக்கம் தெரிவித்தேன்.
இப்போது ஆச்சரியம் என்னவென்றால் எமது அணி களத்தில் இறங்கிய பிற்பாடு சிறிதேனும் குறையாத எமக்கான ஆதரவு கண்டு பூரிப்பாக இருக்கிறது. எமக்கான ஆதரவு இப்போது பெருகிக்கொண்டு வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொறுத்தவரையில் பதுளை மாவட்டத்தின் எந்தப் பிரதேசத்துக்கும் சென்று தைரியமாக மக்களிடம் வாக்கு கேட்பதற்கான ஒரு களத்தை நான் ஏற்படுத்தி வைத்திருக்கிறேன்.
பதுளை மாவட்டத்தில் 365 பெருந்தோட்டப் பிரிவுகள் காணப்படுகின்றன. அத்தனை பெருந்தொட்ட பிரிவுகளுக்கும் என்னால் ஆன அனைத்து பணிகளையும் செய்திருக்கின்றேன். ஆகவே தான் தைரியமாக வாக்கு கேட்பதற்கு முடியுமாக இருக்கின்றது. அதேபோல் நாயபெத்த தோட்டத்துக்கு வருகை தந்த நான் இங்குள்ள மக்களிடம் தைரியமாக வாக்கு கேட்கும் நிலைமையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றேன்.
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு என்ற எமது அணியானது அப்பழுக்கற்ற அணியாகும். எமது அணியின் அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், இணைப்பாளர்கள் மற்றும் பேட்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் எவராலும் குற்றம் சுமத்த முடியாத, எவராலும் குறை காண முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.
ஏனைய கட்சிகள் மீதும் அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் என் மீது அல்லது எமது அணியினர் மீது அவ்வாறான எந்த ஒரு குற்றச்சாட்டுக்களையோ அல்லது விமர்சனங்களையோ முன்வைக்க முடியாத நிலைமையில் நாங்கள் இருக்கின்றோம்.
அதேபோன்று நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம் பெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் எமது அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. அதற்கான நம்பிக்கையும் நமக்கு எழுந்திருக்கின்றது அந்த நம்பிக்கையை எமது மக்கள் சாத்தியமாக்குவார்கள் என்றும் நம்புகிறோம்.
கறை படியாத கரங்களைக் கொண்டிருக்கின்ற நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் ஆட்சி அமைக்கின்ற தரப்போடு இணைந்து அரசாங்கத்தின் பங்காளியாக எமது மக்களுக்கான சேவைகளை நாங்கள் முன்னெடுப்போம். அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கும் போது தான் பதுளை மாவட்டத்தில் விடுபட்ட பணிகளை முன்னெடுத்து அவற்றை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும்.
இவ்விடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை கூறி வைக்க விரும்புகிறேன். மலையக மக்களை பொருத்தவரையில் தெரிவாகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியோடு அல்லாது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டிருப்பதாலோ அல்லது வளமான உரைகளை ஆற்றுவதாலோ எத்தகைய பயனும் எமது மக்களை அடைந்து விடப் போவதில்லை.
அந்த வகையில் சமூகத்தின் தேவை உணர்ந்து கடமையாற்ற வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
நான் முன்னரே கூறியது போன்று இம்முறை இடம் பெற இருப்பது மிகவும் வித்தியாசமான தேர்தல் ஆகும். முற்றாக மாறுபட்டு தேர்தலாகவும் இது காணப்படுகிறது. கடந்த காலங்களைப் பொறுத்தவரையில் தேசிய கட்சிகளில் போட்டியிட்டு இரண்டு வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த நிலைமை காணப்பட்டது.
இருப்பினும் இம்முறை அதற்கான சாத்தியம் இல்லை. ஆகவே தான் தனித்துப் போட்டியிடுகின்றோம். தனித்துப் போட்டியிடும் போது 25,000 வாக்குகளுக்கு அதிகமாக பெற்றுவிட்டாலே நாம் பதுளை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆகவே பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த எமது மக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளாக இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மிகச்சரியாக தீர்மானித்து இந்த தேர்தலிலே வாக்களிக்க கூடிய பொறுப்பு எமது மக்களிடம் இருக்கிறது. ஆகவே அந்தப் பொறுப்பை அந்த கடமையை மிகச் சரியாக நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.